Wednesday, September 17, 2014

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

 

காட்டை பற்றிய கனவு சிறிய வயது முதல் உண்டு. மலையடிவார கிராமம் என்றாலும், மலை மேல் ஏறியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம், ஆனால் காடு என்று ஏதுமில்லை. சோம்பேறித்தனத்தாலும், இது போன்ற விஷயங்களுக்கான தகுந்த துணையில்லாததாலும், வீட்டில் உதை கிடைக்குமென்பதாலும் அந்த பக்கம் போனதில்லை. இருந்தும் காட்டை பற்றி பல கதைகள், சாகச கதைகள் எல்லாம் படித்து படித்து ஒரு மயக்கம் உண்டு.

சில சந்தர்ப்பங்களில் காட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஏமாற்றம் தான். சுருளி அருவி பகுதி நல்ல அடர்ந்த காட்டு பகுதி. ஆனால் எங்கும் நுழைய முடியாத படி வனத்துறை கட்டுப்பாடு உண்டு. தப்பித்தவறி சென்றாலும் பாட்டில்கள் காலை கிழிக்கும் அபாயமுண்டு. குற்றாலம் பற்றி பெரிய கனவுடன் சென்ற எனக்கு, மெயினருவி தந்தது ஏமாற்றம். மரங்களுக்கு நடுவில் சத்தத்தை மட்டும் முதலில் காட்டி சுருளி அருவி தரும் அந்த தரிசனம் இதிலில்லை. மொட்டை பாறையில் கடைகளுக்கு நடுவிலிருக்கும் அருவி எனக்கு பிடிக்கவில்லை, ஒரு குரங்கு கூட இல்லாத அருவி என்ன அருவி.

பெங்களூருக்கு வந்த பின் அலுவலக நண்பர்கள் மலையேற்றத்திற்கு அழைத்தனர், ஆர்வத்துடன் சென்று காரிலிருந்து இறங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு பெரிய மொட்டை மலை. காட்டு ஆசை கொஞ்சம் பூர்த்தியானது கோவா சென்ற போது. யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஏற்பாடு செய்த மலையேற்றம், ஓரளவிற்கு காட்டு ஆசையை திருப்தி செய்தது. ஓரளவிற்கு அடர்ந்த காடு, எப்போதும் ஒரு பக்கத்தில் சிறிய ஓடை, குளிர்.

ஆர்வக்கோளாறில் கூட வந்த அனைவரையும் விட்டு விட்டு தனியாக சென்று கொண்டிருந்தேன். சின்ன சின்ன செடிகள், மரங்கள் என்று பார்த்து கொண்டே சென்றவன், திடிரென ஏதோ நினைவு வந்து நின்று பார்க்கும் போதுதான் அடர்ந்த காட்டிற்குள் தனியாக இருக்கின்றேன் என்று தெரிந்தது. ஒரு கணம் சிறிய அதிர்ச்சி. வழி தப்பி எங்கும் போக வாய்ப்பில்லை, அனைத்து பகுதிகளிலும் அம்புக்குறி போட்டு வைக்கப்பட்டிருந்தது, பின்னால் ஒரு முப்பது பேர் வந்து கொண்டு இருக்கின்றார்கள். இருந்தும் காட்டிற்குள் தனியாக இருப்பது என்பது ஒருவித கிளர்ச்சியையும் பயத்தையும் தந்தது. யந்திர ஓசை கேட்ட செவிகள், இயற்கை ஓசையை கேட்டு கொஞ்சம் தயங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் அனைத்தும் மறந்து ஒரு உற்சாகம், அதன் பின் அனைத்து நாட்களிலும் நான் மட்டும் முன்னே போய்க் கொண்டிருந்தேன். யார் கூட வருவதையும் மனம் விரும்பவில்லை. காடும் நானும் தனியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. இரவில் அப்படி ஒரு துல்லியமான வானத்தை கண்டதில்லை. அந்த பத்து நாட்களும் தனி உலகில் இருந்தேன். தினமும் ஐஸ் போன்ற தண்ணீரில் குளியல், பனி சூழ்ந்த கூடாரத்தில் தங்கல். கடைசி நாளில் ஒரு வருத்தம். அந்த அனுபவத்தை மீண்டும் தந்தது காடு நாவல்.

காடு அந்தளவிற்கு மனதை கவர என்ன காரணம், முதலில் அது நாமிருக்கும் இடத்திற்கு நேர் எதிரானது. இரண்டாவது  இயற்கையன்னை பரிபூரணமாக இருக்குமிடம். (காடு என்பதை இங்கு குறிப்பது மனிதனின் கைவண்ணம் படாத இடத்தை, ஊட்டி, கொடைக்கானல் போன்றவையல்ல, அவைகளுக்கும் ஏசி அறைக்கும் அதிக வேறுபாடில்லை) காடு என்பது தனி விஷயமோ, ஒரு பொருளோ இல்லை, மரம், செடி கொடி, ஓடை ஆறு, மிருகங்கள் என அனைத்தும் சேர்ந்தது. மனிதனும் உள்ளே சென்றால் அவனும் காட்டின் ஒரு அங்கம் தான். ஆனால் மனித மனம் மற்றவை போன்று செய்ல்படுவதில்லை, அனைத்து உயிர்களும் சூழலுக்கு தகுந்தால் போல் தன்னை மாற்றிகொள்ளும் போது மனிதன் சூழலை தனக்கு தகுந்தாற் போல் மாற்ற நினைக்கின்றான். காட்டில் அனைத்தும் அதனதன் எல்லைக்குள்ளேயே வாழ்கின்றன, எல்லை தாண்டினால் காடு தாங்காது. மனிதனும் தன் எல்லையை உணர்ந்து கொண்டால் கொடும் காட்டிலும் வாழலாம்.

பெரும்பாலான மனிதர்களுக்கு காடு என்பது மரக்கூட்டம், மரங்கள் என்பது பணம். அவ்வளவுதான். பல்வேறு காரணங்களுக்காக காடு அழிக்கப்பட்டு வருகின்றது. காடு என்பது மழைக்காரணி என்பது மட்டுமல்ல, அது பல உயிர்களின் உறைவிடம். மனிதனுக்குதான் தன்னை தவிர அடுத்த உயிர்களை பற்றி கவலையில்லையே. காடுகளை அழிக்க அழிக்க, மிருகங்கள் ஊருக்குள் வருகின்றன, விளைவுகள் இப்போதுதான் தெரிய ஆரம்பிக்கின்றது.

காட்டை அதன் சூழலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல, காட்டை விவரிப்பது என்பது அதிலிருக்கும் ஒவ்வொரு செடி கொடி மிருகங்களை விவரிப்பது. ஜெயமோகன் கச்சிதமாக அதை செய்துள்ளார். காலை நேர காடு, மழை கால காடு, இரவு நெருங்கிவரும் காடு, இரவில் காடு, காட்டின் திசைகள், யானைகளின் பழக்கங்கள், காட்டிற்கு மதம் பிடிக்கும் காலம். வசந்த காலம் என்பதை படித்திருக்கலாம், மிஞ்சி போனால் பக்கத்து பார்க்கில் பூ பூக்கும் மரங்களை பார்த்து பரவசப்பட்டிருக்கலாம், ஆனால் காட்டில் வசந்த காலம் எப்படி இருக்கும், எங்கும் பூ பூக்கும் காடு, பூ மணத்தில் மதம் பிடிக்கும் யானைகள், குரங்குகள். அனைத்தும் ஜெயமோகனின் கைகள் வழியாக நம்மிடம் வந்து சேர்கின்றது.

கதை

கிரிதரன் நாயர் அவன் மாமா காட்டிற்கு கட்டும் கட்டுமானங்களை கற்று, தொழில் பழக வருகின்றான். அவன் ஏற்கனவே படித்த கவிதைகள் அவனை காட்டை நோக்கி தள்ளுகின்றது. காடு அவனை பிடிக்கின்றது. காட்டு நீலியும். இறுதியில் காட்டை அவன் விடும்படி ஆகின்றது, காட்டை விட்டு நாட்டில் வந்தமர்கின்றான்.

காட்டை பற்றி ஆரம்ப வர்ணனைகளும், காட்டின் நுணுக்கமான விவரங்களையும் படிக்கும் போது இவர் எவ்வளவு நாள் காட்டில் திரிந்தார் என்று எண்ண தோன்றுகின்றது. ஒவ்வொரு பகுதியும் மிகச்சிறப்பாக இருக்கின்றது. காட்டில் வழி தப்பும் கிரிதரன் அலைந்து திரியும் போது அவனுக்கு காட்சியளிக்கும் காடு மிரட்சி தருவது. காடு நமக்கு அந்நியம் என்ற எண்ணமே அதை மிரட்சி தரும் ஒன்றாக்குகின்றது. பசியில் என்ன செய்வது என்பதை கூட தெரியாமல் அலையும் அவன், பின்னாளில் காட்டை பற்றி பயம் போனதும் இரவிலும் காட்டில் அலைய துணிகின்றான், காட்டில் கிடைப்பதை வைத்து பசி தீர்க்க கற்று கொள்கின்றான். காட்டை நன்கு அறிந்த பின் அது பயம் தருவதில்லை, உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது. காடு நமக்கு அந்நியமில்லை என்ற எண்ணமே நமக்கு பயத்தை போக்குகின்றது. யானை கூட்டத்தை கண்டால் கூட மிரளாமல் அவைகளை விட்டு விலகிச்செல்ல கற்று தருகின்றது. அனைவரும் மிரளும் கீறக்காதனும் நெருக்கமானவானகத் தோன்றுகின்றது.

நாவலின் இரண்டு சரடுகள் காடு, காதல் (காமம் என்றும் பொருள் கொள்ளலாம்). கிரிதரனை இரண்டும் சேர்ந்து அடிக்கின்றது. கிரிதரனின் காதல் காமம், இரண்டும் காட்டில் பொங்கி வழிகின்றது. காமம் தரும் குற்றவுணர்ச்சி, காதல் தரும் பரவசம் இரண்டிற்குமிடையில் சிக்கி விழிக்கும் ஒரு சராசரி. எளிதில் உணர்ச்சி வசப்படும் பாத்திரம். குளிக்கும் நீலியை காணும் அவனிடம் எழுவது காமமல்ல காதல், வெறித்தனமான காதல். அதே சமயம் மாமாவின் மனைவியின் நினைவுகள் அவனை காமத்திற்குள் தள்ளி குற்றவுணர்வை தருகின்றது.

காட்டை விட்டு வந்தபின் கிரிதரனின் வாழ்க்கை போகும் பாதை வெறுமை.

அய்யர், குட்டப்பன் இருவரும் காட்டை அடைந்து காட்டை விட்டு போக மனதில்லாமல் அங்கேயே இருப்பவர்கள். இருவரில் குட்டப்பனே கவர்கின்றான். அய்யர் காட்டை தன் கவிதை மனம் வழியே கண்டு ரசிப்பவர். காட்டிலிருக்கும் அழகும், அமைதியும், சவால்களும் அவரை அங்கு பிடித்து வைக்கின்றன. ஆனால் குட்டப்பனனின் மனம் இயல்பாகவே காட்டை அடைந்துவிட்டது.காட்டை உட்கார்ந்து ரசிக்கும் ஆளல்ல, காட்டுடன் இசைந்து வாழும் ஒருவன். காட்டுடன் கலந்துவிட்டவன். காட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் இறைவனின் விளையாட்டு என்று நம்பி அதை ஏற்று கொள்பாவன். காட்டிற்கு ராஜா யானை, அதன் கையால் மரணிப்பதே தன் வாழ்விற்கு அர்த்தம் என்று நினைக்கும் அளவிற்கு காட்டுடன் கலந்தவன். அய்யர் அனைத்தையும் விட்டு காட்டில் வந்தமர்கின்றார், அவரை வதைத்தது எதுவென்று அறிந்து கொண்டதாக கூறுகின்றார். எதுவாக இருக்கும்? எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை குட்டப்பன் மாதிரியில்லாமல், காட்டை ரசித்து கொண்டே இருப்பதாக இருக்குமோ? யாருக்கு தெரியும்

காமம். சினேகம்மை, குட்டப்பன், ராசப்பன், ரெஜினா இவர்களுக்கிடையிலான உறவுகள், விளையாட்டுகள். ரெசாலத்திற்கும் தேவாங்கிற்கும் இடையிலான பாசம், அதன் பின்னால் இருக்கும் சோகம், கிரியின் மாமா அவரின் முன் கதை, பின் கதை. கதையில் விதவிதமான பெண்கள். கிரியின் மாமி, கிரியின் அம்மா, அக்கம் பக்கத்து அக்காக்கள், நீலி, கடைசியில் வரும் எஞ்சினியர் மனைவி, கிரியின் மனைவி வேணி. இவர்கள் அனைவரும் கிரியிடம் ஏற்படுத்து பாதிப்பு. காமத்தின் விதவிதமான உருவம். கிரிதரனுக்கு வரும் கனவுக்காட்சி, அவனின் குழப்ப நிலையை அருமையாக காட்டுகின்றது. 

கிரிதரனின் கதை இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் போய் வருகின்றது. முதல் காட்சியில் வரும் பாலம், அடர்ந்த காட்டில் இருக்கும் அந்த இடம், கிரிதரனின் முதிய வயதில் சாக்கடை ஓடும் குப்பை கூளமாக மாறி இருக்கும் காட்சி ஒன்று போதும் இன்று காடுகளின் நிலையை சொல்ல.  எங்கள் ஊரில் பள்ளி அருகே ஒரு ஓடை உண்டு, என் அப்பாவின் சிறுவயதில் அதில் எப்போது தண்ணீர் போகும் என்பார், நாங்கள் படிக்கும் போது நல்ல மழை பெய்தால் அதில் தண்ணீர் போகும். இப்பொது இரண்டு மாதமாக தொடர்ந்து மழை பெய்கின்றது, இன்றும் அதில் சாக்கடைதான் போகின்றது, பன்றிகள் தான் திரிகின்றது. இதை படிக்கும் போது எனக்கு அதுதான் நினைவில் வந்தது.

கதையை மேலும் சுவரஸ்யமாக்குவது உரையாடல்கள். கதையை சாதரண பேச்சு மொழியில் எழுதியிருக்கலாம், ஆனால் அது இந்தளவிற்கு உயிரோட்டமானதாக இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த பேச்சு வழக்கு முதலில் நம்மை நம்மிடத்திலிந்து பெயர்த்து அங்கு கொண்டு செல்கின்றது. இயல்பாகவே கிராமத்து பக்கங்களில் கேலியும் கிண்டலுமுண்டு, அதை அந்த மொழியில் கேட்டால் மட்டுமே சிறப்பாக இருக்கும். பேச்சு மொழியில் எழுது மொழியில் மாற்றினால் சில சமயம் கொஞ்சம் ஆபாசமாக கூட போய்விடும். குட்டப்பனின் வார்த்தைகள் அந்த மொழியில் இருப்பதுதான் அதன் சிறப்பு, ஒரு சில விஷயங்களை என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து கண்டுணரவேண்டும். வனநீலியின் கதை, பரபரப்பான த்ரில்லர் வகை. சில ஃபேண்டசி வைகையும் நமக்கு தேவையாக இருக்கின்றது, ஜெயமோகன் இந்த வகை எழுத்தில் தேர்ந்தவர்.

கதையில் பல இடங்களில் கிறிஸ்துவத்தை பற்றி வருகின்றது. பல இடங்களில் கிண்டல் தொனி இருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. இன்று மலை முழுவதும் கிறிஸ்துவம் பரவும் காரணம் அறிய கொள்ளாம் சே, அறிந்து கொள்ளலாம். 

நாவல் காட்டின் பல்வேறு கால நிலைகளை காட்டுகின்றது. ஆடிச்சாரலில் சிலுசிலுவென்று ஆரம்பிக்கும் கதை, பெருமழை காலத்தில் முடிகின்றது. இறுதி பகுதி நெருங்க நெருங்க கதையிலும் ஒரு சோகம் சூழ்ந்து கொள்கின்றது, வெறுமை வர ஆரம்பிக்கின்றது. நீலியின் மரணத்துடன் கதை முடிகின்றது. கிரிதரனின் மாற்றமும் நிகழ்கின்றது. அவனிடமிருந்த கனவு சிதைந்து, சராசரி மனிதனாகின்றான்.

காட்டின் வர்ணனைகள் அனைத்தும் சாதரண வார்த்தைகளில் அமைந்துள்ளது. பெரிய பெரிய வார்த்தைகளை போட்டு குழப்பாமல், சாதரண வார்த்தைகளால் நமக்கு அதன் சித்திரத்தை தந்துவிட்டார். உதவிக்கு சங்கப்பாடல்கள். கிரிதரன் - அய்யர் உரையாடல்கள் அனைத்தும் காட்டின் பல பரிமாணங்கள்.
இனி என்று காட்டிற்குள் சென்றாலும் இந்த காடு நாவலின் நினைவே இருக்கும். காஞ்ரமரத்தை தேட தோன்றும். படிக்க வேண்டிய ஒரு நாவல்.

Wednesday, July 23, 2014

காடு -பாலா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
‘காடு’ நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி.
உங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி நான் காட்டை நேரில் காண நேர்ந்தால் அங்குள்ள சிறு பூச்சிகளின் ஓசையைக் கூட என் மனம் தவறவிடாது. அணு அணுவாய் ரசிக்கத்தோன்றும். கிரியும் அய்யரும் ரசித்தது போல.
நாவலில் காட்டு வாழ்கையையும் நகர வாழ்கையையும் ஆங்காங்கே ஒப்பிடப்பட்டுள்ளது. அவை காட்டு வாழ்கைக்காக என்னை ஏங்க வைக்கும் வரிகள்.
நாவலில் கவித்துவம் என்பது நான் இது வரை அறிந்திராத ஒன்று. ஆனால் காடு நாவலின் மொழி நடை என்னை பிரமிக்க வைக்கிறது. உவமைகள் அனைத்தும் புதிதாகவும் கதாபாத்திரங்களின் மனவோட்டங்களை என்னுள்ளும் பிரதிபலிக்க ஏதுவாக இருந்தது.
கீரக்காதனும் தேவாங்கும் மனதில் நீங்காத இடம் பிடித்த கதாபாத்திரங்கள். அவர்களின் முடிவு மனதை கனக்க வைத்து.
என்னுடைய ‘favorite hero’ யார் என்று கேட்டால் தயங்காமல் குட்டப்பன் என்று சொல்லுவேன். எனக்கு மட்டும் அல்ல, கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கெல்லாம் குட்டப்பன் தான் ஹீரோ. குட்டப்பன் ஒரு தனி மனிதன் இல்லை. அவர் வாழும் காட்டின் ஒரு பாகம் என்றே தோன்றுகிறது.
நாவலைப் படித்த பிறகு சங்க இலக்கியம் மேல் ஆர்வம் முளைத்திருக்கிறது. குறிப்பாகக் கபிலரின் வரிகள். கபிலர் கண்ட வனத்தையும் அவர் வர்ணித்த பெண்ணையும் இந்த நாவலின் வழியாக உணர்த்திவிட்டீர்கள். கபிலரைப் படித்து விட்டு, இந்த நாவலை மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
பல நூறு விஷயங்கள் நாவலைப் பற்றிக் கூற இன்னும் என் மனதில் எஞ்சி இருக்கிறது. அனால் அதைத் தொகுக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறன். அத்தனையும் ஒரு பேரனுபவமாக மனதில் தேக்கி வைத்துள்ளேன்.
மிக்க நன்றி.
- பாலா
அன்புள்ள பாலா
காடு உங்களைக் கவர்ந்தது அறிந்து மகிழ்ச்சி
காடு இயற்கையின் குறியீடு. அதன் தன்னிச்சைகளின் , விதிகளின் அடையாளம். அங்கே இயற்கையாகவே வென்றுசெல்பவனே கதாநாயகன். ஆகவே காடு குட்டப்பனின் கதைதான். குட்டப்பனில் இருந்து வேறுபடும் புள்ளிகளாகவே பிறரை மதிப்பிடவேண்டும்
அவனுடைய மரணமும் ஒரு ‘தூய’ மிருகம்போலத்தான். பெரும்பாலான மிருகங்கள் சாவதில்லை. கொல்லப்படுகின்றன

ஒழுக்கத்துக்கு அப்பால்

ஜெ,

ஒருவாரமாக மீண்டும் காடு.  இது நாலாவது முறை. முதலில் ஒருமுறை ஒரேமூச்சில் வாசித்து முடித்தேன். அதன்பிறகு தொடர்ந்து கொஞ்சம் கொஞ்ச்மாஅக வாசித்தேன். காட்டை எல்லாரும் பார்த்திருப்போம். ஆனால் இதிலே சொல்லப்படுகின்ற மழைக்காட்டினை நம்மிலே பலபேர் பார்த்திருக்கபோவதில்லை. அதனால்தான் இந்த தனி விருப்பம் தோன்றியது. ’வறனுறல் அறியா சோலை’ என்ற வரியை மந்திரம் மாதிரி மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு ஒன்று தோன்றியது. நாவலின் நிறமே பச்சைதான். பச்சைநிறமான காடு. ஒளியும்கூட பச்சை நிறமானதாகவே இருந்தது. பச்சை நிறமான வெயிலை நான் ஊட்டியின் வெஸ்டர்ன் கேச்மெண்ட் ஏரியாவிலே பார்த்திருக்கிறேன். புல்வெளியிலே எல்லா ஒளியும் பச்சையாகத்தான் இருக்கும். மழைமேகம் சூழ்ந்த பச்சை நிறம். நீங்கள் வெண்முரசிலே புல்லை மேகத்தின் குழந்தை என்று சொல்வதை வெஸ்டர்ன் கேச்மெண்ட் போனால்தான் பார்க்கமுடியும். கனவுமாதிரியான இடம் ஜெ. அங்கேயே சென்று வாழ்ந்துகொண்டிருப்பதைப் போல இருந்தது காடு நாவலை வாசித்த அனுபவம். அதற்குமேல் என்ன சொல்ல

பச்சைநிறம் என்றால் என்ன? வாழ்க்கையின் நிறம் பச்சை. பசுமை என்பதையே வாழ்க்கை என்ற அர்த்த்ததிலேதான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். பசுமையான நினைவுகள். பசுமை என்பது மண்ணும் நீரும் கலந்து வரும் நிறம் என்று நினைத்தேன் - காடு வாசித்த ஹேங் ஓவர்தான். )). நீர் இல்லாவிட்டல் பச்சை இல்லை. வாழ்க்கையில் நீராக இருப்பது என்ன என்று சிந்தித்தேன். அது கனவுகள்தான். ஆகவேதான் இளமையில் வாழ்க்கை வறனுறல் அறியா சோலையாக இருக்கிறது. காதல் அப்படி பசுமையாக இருக்கிறது

காடுநாவல் ஒரு கனவு. மென்மையான ஒரு பகல்கனவு மாதிரி. அது உடனே கலைந்துவிடும் என்பதுதான் அதிலே உள்ள அழகு. அதைத்தான் குறிஞ்சிமலரைப்பற்றிச் சொல்லும்போதும் சொல்கிறீர்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் அழகு. மிகச்சிறப்பான தனித்தன்மை கொண்டது. இதில் வரும் நான்கு கதாபாத்திரங்களின் பொதுவான அம்சம் என்ன என்று யோசித்தேன். கிரிதரன் முதல்காதலின் பரவசத்திலே இருக்கிறான். அவனுக்கு நேர் எதிராக பிராக்டிக்கலாக இருக்கிறான் குட்டப்பன். அதேபோல ரெசாலம், இரட்டையர் இருவரும் அன்புடைய வேறு இரண்டு வடிவங்களை காட்டுகிறார்கள். அன்பே இல்லாமல் இதையெல்லாம் பார்ப்பவராக இருக்கிறார் அய்யர். இந்த பின்னல்தான் இந்த நாவலை மிகச்சிறப்பானதாக ஆக்குகிறது

நுட்பமான வர்ணனைகளும் தகவல்களும் காட்டையும் மக்களையும் கண்ணுக்குள் வாழச்செய்கின்றன . நான் வாசித்தேனா அங்கேயே வாழ்தேனா இல்லை கனவாகக் கண்டேனா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒருபக்கம் மேரி மறுபக்கம் சினேகம்மை. ரெண்டுபேருமே அன்பின் இரு வடிவங்கள். சினேகம்மை என்று அவளுக்கு போட்டபெயரே சிறப்பு. அவளைப்போல லவ்வபிளான ஒரு பெண்கதாபாத்திரத்தை நான் தமிழிலே வாசித்ததில்லை. [ரொம்பநாள் எனக்கு நபக்கோவின் லோலிதா பிடித்தமானவளாக இருந்தாள்]

இந்த நாவலின் மிகச்சிறந்த அம்சமே இது தமிழில் எழுதப்பட்ட முதல்  amoral நாவல் என்பதுதான். செக்ஸை எல்லாம் நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே ஒழுக்கநோக்கம் இருக்கும். இது இயல்பாகவே ஒழுக்கமில்லாமல் இருக்கிறது. கனவுக்கு ஒழுக்கம் இல்லை அல்லவா?

சண்முகம்


<a href="http://kaadu

காடு-விக்கி

காடு ஜெயமோகன் எழுதிய ஐந்தாவது நாவல். இதை 2003-ல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. ஏறத்தாழ நாநூறு பக்கங்கள் கொண்ட நாவல் இது. மழைக்கால இளவெயில்போல வாழ்க்கையில் அபூர்வமாக வந்து உடனேயே இல்லாமலாகும் முதற்காதலை இக்கதையில் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். இதன் இரண்டாவது பதிப்பு இப்போது கிடைக்கிறது.

கதைச் சுருக்கம்[தொகு]

காடு நாவலின் கதாநாயகன் கிரிதரன். இவன் அப்பா எதிலும் பிடிப்பில்லாத மனிதர். அம்மா மிகவும் பரபரப்பும் பதற்றமும் கொண்டவள். மகனை முன்னேற்றவேண்டும் என்பதற்காக தன் அண்ணாவிடம் அவனை ஒப்படைக்கிறாள். அண்ணா மலையில் காடுகளை வெட்டுவதை குத்தகை எடுத்துச் செய்துவருகிறார். அவரது மனைவி அழகானவள். அவளுக்கும் அந்த வீட்டில் வேலைசெய்பவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பில் பிறந்த மகள் அவருக்கு இருக்கிறாள். அவலட்சணமான பெண் அவள்
கிரிதரன் மாமாவின் ஊழியனாக காட்டுவேலையை மேற்பார்வையிட காட்டுக்குச் செல்கிறான். அங்கே குட்டப்பன் என்ற ஒருவனை அறிமுகம்செய்துகொள்கிறான்.குட்டப்பன் காட்டைப்பற்றி எல்லாமே தெரிந்தவன். சாகஸக்காரன். மிகநகைச்சுவையாக பேசுவான். அவனைத்தவிர அங்கே ரெசாலம் குரிசு போன்றவர்களும் இருக்கிறார்கள்
காட்டில் கிரிதரன் அய்யர் என்ற எஞ்சீனியரை சந்திக்கிறான். பேசிக்கொண்டே இருக்கும் இயல்புள்ள அய்யர் ஒரு அறிவுஜீவி. காட்டுக்கு வேலைக்கு வந்து காடு மீது காதல்கொண்டவர். அவரது தொடர்பால் கிரிதரன் இலக்கியம் இசை எல்லாவற்றையும் அறிகிறான்
காட்டில் கிரிதரன் அழகான கரியநிறமுள்ள ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் ஒரு ஆதிவாசிபெண்.நீலி என்று அவளுக்குப் பெயர். அவள்மேல் அவன் தீவிரமான காதல் கொள்கிறான். அவளைச் சந்திக்கச் சென்று இரவெல்லாம் காட்டில் அவள் வீட்டுமுன் நிற்கிறான். அவள் மெல்லமெல்ல அவனை விரும்புகிறாள்
நீலியை ஒரு மலைதெய்வமாகிய நீலி அம்மனாகவே கிரிதரன் மயங்குகிறான். அவள்மேல் காதலும் அச்சமும் கலந்த உணர்ச்சியே அவனுக்கு இருக்கிறது. ஆகவே அவன் அவளை தீண்டுவதே இல்லை.
இந்நிலையில் பெரும் மழை வருகிறது. மழையில் அவன் நீலியுடன் மலையுச்சிக்குச் சென்று குறிஞ்சி மலரை பார்க்கிறான். அந்த மலருக்கு அழகோ மணமோ இல்லை. அது 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் என்ற அபூர்வம் தவிர. அந்த மலரைப் பார்க்கும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது
காட்டுக்குள் கடுமையான விஷக்காய்ச்சல் பரவுகிறது. காட்டில் இருக்கும் மிஷனரி டாக்டர் நோயாளிகளைக் காப்பாற்றுகிறார். ஊருக்குள் சென்று மருந்து வாங்கி வரும் கிரிதரன் அப்போது நீலி காய்ச்சலில் இறந்துவிட்ட சேதியை கேட்கிறான். அவன் மனம் உடைகிறான்
அப்போது அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான புதிய எஞ்சீனியர் மேனனின் மனைவி அவனை தன் காமத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறாள். அவனது அந்த முதல் அனுபவம் நடக்கும்போது அவன் அந்த வீட்டுக்கு வெளியே நீலி அழுதுகொண்டு நிற்பதாக உணர்கிறான்.
இந்த இடத்தில் நாவல் முடிகிறது. ஆனால் கிரிதரன் முதிர்ந்து கிழவனாகி மகள் வீட்டுக்குச் செல்லும்போது அப்போது நாகரீக ஊராக ஆகிவிட்டிருந்த அந்த காட்டுப்பகுதியில் இறங்கி பார்க்கும்காட்சியில் கதை தொடங்குகிறது. நினைவுகள் முன்னும் பின்னும் கலந்து ஓடும் பாதையில் கதை செல்கிறது.
கிரிதரன் அந்த உறவுக்குப் பின் காட்டைவிட்டு வந்து விடுகிறான். அதன்பின் வியாபாரம்செய்து தோற்கிறான்.வேணியை திருமணம் செய்து கசப்பான மணவாழ்க்கையை வாழ்கிறான். பலவகையான சரிவுகளுக்குப் பின்னர் அவன் ஒருவகையில் வாழ்க்கையில் சமனம் அடைகிறான். அவனது மொத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் காட்டில் இருந்த அந்தச் சில நாட்கள் மட்டுமே. மிச்ச வாழ்நாள் முழுக்க அவன் அந்நாட்களை எண்ணி ஏங்கி ஏங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
பசுமை மாறாக் காட்டின் மிகஅழகான சித்திரத்தை உருவாக்கி அளிக்கும் நாவல் இது. அதற்காகவே இது விரும்பப்படுகிறது. வர்ணனைகள் மிகவும் புதியனவாகவும் நுட்பமான காட்சிகளை உருவாக்கக் கூடியனவாகவும் உள்ளன. மிருகங்களும் அழுத்தமான கதாபாத்திரங்களாக காட்டபட்டிருக்கின்றன. குறிப்பாக இதில் வரும் யானைகள் . குட்டப்பன் இந்நாவலின் உண்மையான கதாநாயகன் என்று சொல்பவர்கள் உண்டு
ஜெயமோகன் நாவல்களில் அதிகமான வாசகர்க¨ள்க் கவர்ந்தது இதுதான். காரணம் இதில் உள்ள மென்மையான கவித்துவம்

Tuesday, July 8, 2014

காடு-ஏக்நாத்

எழுத்து பொதுவானது. அது தூரத்தில் கிடக்கும் ஒரு குச்சியைப் போன்றது. அல்லது ஒரு கல்லைப் போன்றது. அதை யாரும் எடுக்கலாம். எடுக்கமாலும் போகலாம். அதை சகதி என்று எடுத்துக்கொண்டால் அதைக் குழைத்து வண்ணமாக்குவதும் பொதுவானதுதான். அது யாராலும் முடியக்கூடியதுதான். ஆனால் அந்த வண்ணங்களின் வழி விரிகிற ஓவியங்களில், உயிரைக் காணுதல் சாத்தியமல்ல. வண்ணங்களும் தூரிகையும் ஒன்றென்றாலும் எல்லா கைகளும் அப்படியொரு ஓவியத்தை வரைந்து விடமுடியாது. அது ஆழ்ந்த கலையின் உச்சம். அப்ப டியொரு உச்சத்தை இயல்பாகக் கொண்டிருக்கிறது, ஜெயமோகனின் எழுத்து. அவரது நாவல்களும் கதைகளும் கண்மூடித்தனமாகக் கட்டிப்போடுகிறது மனதை. எங்கும் திசை திரும்பிவிடாதபடி ஒவ்வொரு எழுத்தும் அதன் ஆழத்துக்குள் அப்படியே இழுத்துச் செல்கிறது.

இப்படியொரு கதையை எழுதிவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கிற மனநிலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது அவரின் மாய எழுத்து. அதில் எப்போது விழுந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆவல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

அவரது அறம் கதைகள், உயிரை நிறுத்தி மீண்டும் உயிர்க்கச் செய்யும் அசாத்திய துணிச்சல் கொண்டவை. சாதாரண அனுபவத்தைத் தாண்டி அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நம்மோடு ரகசியமாகப் பேசுபவை, நாளையும் நாளை மறுநாளுமாகப் பேசிக்கொண்டே இருப்பவை. தூக்கமற்ற இரவுகளின் தனிமையில் இவர் கதைகளின் கதாபாத்திரங்கள் காற்றின் வழி வந்து பேசிப்போகிறார்கள். ‘அறம்’ கதையில் பெரியவர் எம்.வி.வெங்கட்ராமும் சாமிநாதுவும் என்னருகில் உட்கார்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டோ, அல்லது தொடையில் அடித்துச் சிரித்துக் கொண்டோதான் இருக்கிறார்கள். சில இடங்களில் நினைத்து அழவும் அழுது நினைக்க வைத்தவர்களும் அவர்கள்தான்.

சோற்றுக் கணக்கு எனக்கு நெருக்கமான கதையாக இருக்கிறது. கொஞ்சம் என் வாழ்க்கையைக் கிளறி சென்றதாகவும் இருக்கிறது. மும்பையின் செம்பூர் பகுதியில் சுற்றித் திரிந்த காலங்களில் சோறுபோட்ட உறவினர் கண்முன் வந்து போனார். அந்த கணக்குக்கு இன்று வரை கைமாறு செய்யவில்லை என்றாலும் இப்போது செய்யத் தூண்டிய கதை அது. கூடவே, கெத்தேல் சாகிப் போன்று எனக்கு ஒருவர் அங்கு கிடைத்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாகச் சென்றிருக்கும் என்கிற நினைப்பும் அவ்வப்போது அலைகழித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மான்சன் வாழ்க்கையில் ஒரு டீ கிடைக்கும் என்பதன் பொருட்டு, இரவு 12 மணிக்கு வரும் நண்பருக்காக நானும் நடிகர் கருணாஸும் கோசலும் காத்திருந்த பட்டினி காலங்களை கிளறி கண்ணீர் வரவைத்த கணக்கு அது.

யானை டாக்டரை இன்னொரு தாயாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. பாபநாசம் திருவள்ளூவர் கல்லூரியில் இளங்கலைப் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியை கட்டடித்துவிட்டு அல்லது வகுப்பு இல்லாத நாட்களில் சேர்வலாறிலும் காரையாறு காட்டிலும் நண்பர்களுடன் அலைந்த நாட்கள் ஞாபகத்து வந்து போயின. நாங்கள் குடித்துப் போட்ட அந்த பீர் பாட்டில்கள் குத்தி ஏதாவது யானை செத்திருக்குமோ என்கிற பட படப்பை, பதைபதைப்பை, பெரும் குற்ற உணர்ச்சியை இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறது இந்தக் கதை. அன்று செய்த அறியா, தவறுக்காக மானசீகமாக யானைகளிட மும் டாக்டர் கே யிடமும் இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண் டேன்.

‘எழுதுதான் எழுதாங்காம். என்ன எழவை எழுதாம்னே தெரியலை. கோட்டிக்காரப் பய’ என்கிற வார்த்தைகளை என் காதுபடவே ஊரில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் ‘கோட்டி’ என்கிற வார்த்தையை எனக்கான அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்டேன். பூமேடையை  நான் அப்படிப் பார்க்க முடியாது. அவரைப் பற்றி மீனாட்சிபுரம் மாமா வாயிலாக சிறு வயதிலேயே கேள்விபட்டிருக்கிறேன். அவர் தியாகி. காந்திதொப்பியும் கதர் சட்டையுமாக அலைகிற அவர் கதையை படித்து முடித்தபோது அவர் மேலான மரியாதை இன்னும் பத்து மடங்கு அதிகமானது.

ஜெமோவின் எல்லா கதைகளும் தொடர்ந்து நெஞ்சோடு சாய்த்து தாலாட்டும் அல்லது தாக்கும் வேலையை செய்துகொண்டே இருக்கிறது.

ஜெயமோகனுக்கு காடு மிகவும் பிடிக்கும் போல. மனதில் ஆழத்தில் எங்கோ உறைந்து கிடக்கிற ஒன்று நம்மை அறியாமலேயே வெளிப்பட்டுக் கொண்டிருப்பது போல, ஜெயமோகனின் கதைகளில் காடு அதிகமாகவே வெளிப்படுகிறது.

‘காடு’ நாவல், யானை டாக்டரின் காடு, ஊமைச் செந்நாயின் காடு, கன்னிநிலத்தின் காடு என காடு விரிந்து கிடக்கிறது ஜெமோவின் மனமெங்கும். இன்னும் சில விடுபட்டிருக்கலாம். நான் கண்ட காட்டுக்கும் ஜெமோவின் காட்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. அவரது காட்டில்தான் மரத்தின் மீது வசிக்கிற அழகிய மலைஜாதிப் பெண் இருக் கிறாள். என காட்டில் நான் மரங்களையும் மலைகளையும் மட்டுமே பார்க்கிறேன். மரத்தின் மீதிருக்கும் தேன்கூடுகளைப் பார்க்கிறேன். அவர் அதைத்தாண்டிச் செல்கிறார். அதைத் தாண்டிப் பார்க்கிறார்.

‘காடு ஒரு குறிப்பேடு. அதன் தாள்களில் அங்கு நடந்தவை அனைத்துமே எழுதப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்களை கவனிக்கும் கூர்மை நமக்கு வேண்டும். அந்த மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்’ என்கிற அவரின் கன்னி நில காடு விசாலமானது. அப்படி மொழியை அறிந்துவிடத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். அந்த நாவலில் அவர் சொல்லியிருக்கும் செடிகளும் பூக்களும் கண்முன் மலர்ந்து மணம் வீசிக் கொண்டே இருக்கின் றன. என் உடலும் உருவமும் அந்த ராணுவ உடைக்குப் பொருந்தாது என்றாலும் நாவலில் வருகிற நெல்லையப்பனாக என்னை மாற்றிப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இந்த நாவலும் ‘உலோகமும்’ அப்படியே சினிமாவுக்காக எழுதப்பட்டது போலவே இருக்கிறது. உலோகத்தில் வரும் இயக்கத்தின் ஆட்களும் ராவின் அமைப்பும் நடுக்கடல் திருட்டும் தொடர் ட்விஸ்டும் நாளிதழ் செய்திகளை விட பரபரப்பானவை. ஒரு பெரிய ஹீரோவுக்கான கதையாக இதை பார்க்கிறேன். ஆனால் இயக்குனர் சுப்பிரமணிய சிவா இதை படமாக்கி இருப்பதாக பின்னர் அறிந்தேன்.

இரண்டு நாவலுமே வாசிப்பில் ஒரு திரைப்படத்தின் காட்சியை கண்முன் நிறுத்தியது என்பது அதிகப்படியான வார்த்தையல்ல. இவ்வளவு வேகமாவும் சுவாரஸ்யமாகவும் செல்கிற நாவல்களை சமீபத்தில் வாசித்ததில்லை.


இலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது. அந்த வாழ்க்கையின் வழி தன்னைத் தேடும் அல்லது தன்னைப் பார்த்துக்கொள்ளும் கலையை, செய்வதாகவே நினைக்கிறேன். அப்படியொரு கலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில் லை. ஜெமோ கதைகளுக்குள் வாழும் கலையை இயல்பாகவே பெற்றிருக் கிறார்.

காடு -கேசவமணி

பூமியில் வாழும் பல்வேறு உயிர்களில் காடு ஒரு பேருயிர். அதற்குப் புலன்கள் உண்டு; கண்களும், காதுகளும் உண்டு. அது பார்க்கவும், கேட்கவும், உணரவும் செய்கிறது. அதற்கேயான பிரத்யேகமான குணங்களும், இயல்புகளும் இருக்கின்றன. பல்வேறு உயிரினங்கள் காடுடன் ஓர் இயைந்த தாளகதியில் வாழ்கின்றன. மனிதன் காட்டிலிருந்து வெளியேறி என்று நகரத்திற்குச் சென்றானோ அன்றே காடுடனான அவனது பந்தம் அறுபட்டுவிட்டது. காடு அவனுக்கு அந்நியமாகிவிட்டது. எனவே காட்டின் ரகசியங்களை மனிதன் இழந்துவிட்டான். இதனால் காடு அவனுக்கு அச்சம் தருவதாகவும், புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் ஆகிவிட்டது. அவற்றுடன் இணக்கமாக வாழும் சாத்தியத்தை அவன் இழந்துவிட்டான். எனவே காட்டின் இயற்கைச் சூழலை சீர்குலைத்து தனக்கான வகையில் காட்டை அழித்து அதை மாற்றும் முயற்சியில் சதா ஈடுபட்டு வருகிறான். அவன் அறிவீனத்தை, அவனுக்கும் காடுக்குமான உறவுவின் சிதைவை, காதலும் காமமும் கலந்து அற்புதமானதொரு புனைவாக நம்முன் விரியச்செய்திருக்கிறார் ஜெயமோகன்.

காடு என்றதும் நம் மனதில் அதைப்பற்றி விரியும் சித்திரங்கள் என்னென்ன? மரங்கள் அடர்ந்த சூரிய ஒளி புகமுடியாத கும்மிருட்டு. தொடக்கமும் முடிவும் அறியமுடியாத புதிர்ப் பெருவெளி. ஏராளமான விலங்குகள், பறவைகள், ஊர்வனவற்றின் இருப்பிடம். இனம் புரியாத அச்சம். குறிப்பாக பாம்புகள், யானைகள் பற்றிய அச்சம். பயத்தையும் தாண்டி அதன் மீது ஒருவகையான ஈர்ப்புணர்வு. இயற்கையின் பேரதிசயம். மனிதன் அதன் முன் சாமானியன் எனும் வியப்பு. அகங்காரத்தை ஒடுக்கித் தன்னை அறியும் ஞானத்தை போதிக்கும் இடம். இப்படி பல்வேறு சித்திரங்களும், உணர்வுகளும் நம் மனதில் எழுகின்றன. இப்படிப் பலவற்றை நாம் காடுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது போலவே மனிதனின் காமத்தையும் இவ்வாறான ஒரு ஒப்புநோக்குடன் நாம் அணுக முடியும். யோசித்தால் காமத்திற்கும் காட்டைப்போலவே இருட்டு, அச்சம், வசீகரம், புதிர், ஆச்சர்யம் மற்றும் தன்னை அறிதல் ஆகிய பல குணாம்சங்கள் இருப்பதைக் காணலாம்.

மனிதனின் ஆதாரத் தேவைகள் இரண்டு. ஒன்று உடலின் தேவை மற்றது மனதின் தேவை. உடலும் மனமும் சமனப்பட முறையே உணவும் காமமும் அவசியம். காமம் என்பது முற்றிலும் உடல் தேவையல்ல மாறாக அது மனத்தின் தேவை. மனத்தின் தூண்டுதல் இன்றி உடலில் காமம் எழ முடியாது. எனவே காமம் மனத்தின் தேவை என்பதுதான் பொருந்தும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இயல்பாக அடையக்கூடிய இதை நம் சமூக அமைப்பு பல காரணங்களால் சிக்கலானதாகவும் சிடுக்கானதாகவும் வைத்திருக்கிறது. மனிதனின் உடல் பசியைப் போலத்தான் காமமும் என்பதை சமூகம் ஏற்க மறுக்கிறது. இப்படி சமூகம் ஒருபுறம் மறுதலிக்க, ஒவ்வொரு மனிதனிடத்தும் காமம் அதன் இயல்பான குணத்திலிருந்து திரிந்து வக்கிரமாக மாறிவிட்டது. எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த காமம் மற்றும் காதலைப் பற்றிய தேடலினூடாக காட்டின் அறிதலாக இருக்கிறது ஜெயமோகனின் காடு.

நாவலின் பல இடங்களில் வெளிப்படும் காடு பற்றிய விவரணைகளும், சித்தரிப்புகளும் காட்டை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறது. நாம் நிஜமாகவே காட்டில் நுழைந்தாலும் காட்டை இவ்வளவு தூரம் நுட்பமாக உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்று சந்தேகம் எழுமளவிற்கு ஜெயமோகன் விவரணைகள் துல்லியமாகவும், முப்பரிமாண உருவம் கொண்டும் நம்முன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. கிரிதரன் காட்டில் வழிதவறிவிடும் பகுதிகள் நம்மை காடுடன் மேலும் நெருக்கம் கொள்ளச் செய்கின்றன. காடு நம் அருகே பக்கத்தில் நின்று நம்மைப் உற்றுப் பார்ப்பதான ஒரு பிரமை நாவலை வாசிக்கும் கணம்தோறும் நம்முள் எழுந்தபடி இருக்கிறது. அவன் தூக்கம் வராத ஒரு இரவில் கொட்டும் மழையைப் பார்த்திருப்பதும், காட்டில் சந்தித்த நீலி என்ற மலைஜாதிப் பெண்ணின் உருவம் தான் தங்கி இருக்கும் குடிலில் தன்னோடு இருப்பதாக அவன் உணரும் தருணங்களின் சித்தரிப்புகளும் புனைவின் உச்சம் எனலாம்.

குட்டப்பன், ரெசாலம், குரிசு ஆகிய பாத்திரங்கள் தத்தம் தனித்தன்மையுடன் நாவலின் பக்கங்களில் உலவுகிறார்கள். எப்போதும் சளசளவென பேசுவதின் மூலம் குட்டப்பனும், தன்னுள் இருக்கும் சோகத்தை வெளிக்காட்டாதவராக, அதிகம் பேசாதவராக தேவாங்குடன் மேஸ்திரி ரெசாலமும், கையில் பைபிளுடன் குரிசுவும் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறார்கள். குட்டப்பன் சொல்லும் கதைகளும், பேச்சும் நம் மனதை, நினைவுகளை தொடர்ந்து கிளரியபடியே இருக்கிறது. சிங்கம் அல்ல யானைதான் காட்டுக்கு ராஜா என்றும், பாறையும் மலையும் தெய்வங்கள் என்றும், காடு பற்றிய அவனது இதர சித்தரிப்புகளும் காட்டைப் பல கோணங்களில் நாம் அறிந்துகொள்ள உதவுகிறது. பல்வேறு சமயங்களில் அவனிடமிருந்து வெளிப்படும் மதம் சம்பந்தமான கருத்துகள் நம்முள் புதியதோர் திறப்பை ஏற்படுத்துகிறது. அவன் சொல்லும் இளையராஜா-வனநீலி-காஞ்சிமரம் குறித்த கதை வசீகரமானது. தன் கற்பனையின் திறத்தாலும், மொழியின் இலாவகத்தாலும் அந்தக் கதையை அற்புதமாக இழைத்திருக்கிறார் ஜெயமோகன். குட்டப்பனுக்கும் குரிசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சிறப்பான நகைச்சுவைக்குச் சான்றாக இருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது நாம் புன்னகைக்காமல் இருக்க முடியாது. பாத்திரங்களின் பேச்சு வழக்கின் மொழி நாவலுக்குத் தனித் தன்மையும் அழகையும் சேர்க்கிறது.

ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது உடலில் எழும் உணர்வுகள் காமம் என்றும், மனதில் ஏற்படும் உணர்வுகள் காதல் என்றும் நாம் பொதுவான வரையறைகளை வைத்திருக்கிறோம். ஆனால் ஒன்று மற்றொன்றாக பரிணமிக்கும் கணத்தை நாம் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. நிர்வாணம் என்பது வெறும் காமம் சார்ந்தது மட்டுமல்ல. நிர்வாணமான உடலை நாம் நேரில் காணும்போது நம்மிடம் காமம்தான் பிறக்கும் காதல் பிறக்கமுடியாது என்று சொல்வதற்கில்லை. சொல்லப்போனால் காமம் காதல் இரண்டுமே ஒருவகையான வேட்கைதான். கிரிதரன் இதனாலேயே காமம் காதல் ஆகிய இரண்டுவித உணர்வுகளுக்கு ஆட்பட்டு நிலைகொள்ளாமல் தவிக்கிறான். ஒரு நாள் இரவில் அவன் நீலியைத் தேடி காட்டுக்குள் செல்லும் காட்சிகள் அபாரமான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கிறது. அவன் நினைவினூடே வந்துபோகும் சங்க இலக்கியப் பாடல்கள் அவனோடு சேர்த்து நம்மையும் உத்வேகத்திற்கு இட்டுச்செல்கிறது. வேட்கை உந்தித்தள்ள, மனம் பரபரக்க அவன் அவளைத் தேடி ஓடுகிறான். வாழ்க்கையில் ஏதோ ஒரு வேட்கை எல்லோரையும் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செலுத்துகிறது. பல்வேறு பிரயத்தனங்கள் செய்து ஒன்றை அடையப் போராடுகிறோம். ஆனால் அவற்றை அடைகிறோம் அல்லது அடையாமல் போகிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. மாறாக அவற்றை அடைவதற்கான தேடல்தான் முக்கியம். தேடலில் கிடைக்கும் பரவசம், கிளர்ச்சி, மனவெழுச்சி இவைதான் நம்மை சதா ஒன்றை நோக்கிச் செலுத்துகிறது என்பதை கிரிதரன் அந்தத் தருணத்தில் உணர்ந்துகொள்கிறான்.

இன்ஜினியர் நாகராஜ அய்யர் அவரது நடத்தையாலும், பேச்சாலும், இலக்கியம் பற்றிய உரையாடலாலும் நாம் மறக்க இயலாத ஒரு பாத்திரமாகிறார். பொதுவாக நாவலில் வரும் சிறிய பாத்திரங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் இந்நாவலில் அது விதிவிலக்காக அமைந்துவிடுகிறது. எனவே சினேகம்மை, ரெஜினாள், ராசப்பன் ஆகிய பாத்திரங்களும் தங்களுக்கென தனித் தன்மையோடு வந்து நம் மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். மிளாவும், தேவாங்கும், கீறக்காதன் என்ற யானையும் கூட நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்திச் செல்வது நாவலின் நுட்பமான கதையோட்டத்திற்குச் சான்று. இவற்றுக்காக ஜெயமோகன் கையாளும் சொற்கள் அதிகமில்லை என்பதும், மிகக் குறைந்த சொற்களில், வாக்கியங்களில் அவர் இதை அனாயசமாக செய்துவிடுகிறார் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது. நாவலில் நிகழ்காலம் கடந்தகாலம் எதிர்காலம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், பிணைந்தும் தன் போக்கில் இயல்பாக விரிந்து, பரந்து வியாபிக்கிறது.

நாவில் காடுக்கும் அதில் வாழும் விலங்குகளுக்கும் மதம் பிடிக்கும் பகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வேனில் காலத்திற்குப் பிறகு, மழை தொடங்கும் நாட்களுக்கு முன் காட்டில் உள்ள மிருகங்கள் அனைத்தும் மதம் கொள்கின்றன. சொல்லப்போனால் மொத்த காடு முழுதுமே மதம் பிடித்து, உக்கிரம் கொண்டு ஆடி அடங்குகிறது. காடுகளுக்கும் சரி, விலங்குகளுக்கும் சரி மதம் பிடிக்கவும் அது தணியவும் குறிப்பிட்ட காலம் இருக்கிறது. ஆனால் மனிதன் என்ற மிருகத்திற்கு காமம் என்ற மதம் நாளும் பிடித்தபடி இருப்பதேன்? அதில் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவதை அவன் உணராமல் இருப்பதேன்? மனிதன் என்ற சமூகம் பெண்கள் என்ற காடுகளைச் சிதைப்பதை யார் தடுப்பது? காடுகள் பல வெந்து சாம்பலாவதை எவ்வாறு தணிப்பது? போன்ற பல கேள்விகளை நாவலின் இப்பகுதி நம்முள் எழுப்புகிறது. மனிதன் என்றாவது காடு, மலை, காமம் மற்றும் காதல் இவற்றுடன் சிநேகமாக வாழ முடியுமா என்பது கேள்விதான்.

வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று நாம் நினைப்பதற்கு மாறாக காரியங்கள் நடந்துவிடுவது. நாம் நினைப்பது நடக்காததை விடவும் அதிக துன்பம் தருவது இது. நீலியிடம் தன்னை முழுதுமாக ஒப்புக்கொடுத்துவிட்ட கிரிதரன், கடைசியில் தன் அழகற்ற மாமா பெண் வேணியைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஆகிறது. நகரத்தின் வாழ்க்கையில் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நீலியின் உருவம் அவ்வப்போது தன் அருகே இருப்பதாக எண்ணி மயங்குகிறான். தன்னை தன்னிடம் மட்டுமே இருத்திக்கொள்ள முடியாத மனிதன் தன்னைப் பிறிதொன்றிடம் ஒப்படைத்துவிடும் முயற்சியாக அவன் நாடுபவைதான் காதல், காமம், கடவுள், கவிதை எல்லாமே. இவைகள் மனித மனத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி அதீதமாகும் போது மனப்பிறழ்வு ஏற்படுகிறது. இதுவே கிரிதரனுக்கு ஏற்பட, அவன் மனப்பிறழ்வின் விளிம்புக்குச் சென்று மீள்கிறான். காடுகள் தங்கள் பழைய பொழிவையும் வனப்பையும் இழந்துவிட்டது அவனைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. இன்று எங்கும் நிறைந்திருக்கும் நகரங்கள் முன்பு காடுகளாக இருந்தவை என்பதை எண்ணி அவன் மனம் தவிக்கிறது.


நாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக, நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. இத்தனை நாளும் வெறும் சொல்லாக நமக்குள் இருந்துவந்த காடு இந்நாவலின் வாசிப்பின் மூலம் நம் அனுபவமாக மாறிவிடும் விந்தை நேரும் தருணங்கள் பிரமிப்பை ஊட்டுபவை. அவை வாசிப்பில் நாம் கண்டடையும் உன்னத, அபூர்வத் தருணங்கள், குறிஞ்சிப்பூவைக் காண்பது போல. ஆகவே, இந்நாவலின் வாசிப்பினூடாக நாம் பெறும் பேரனுபவம் என்றென்றும் மறக்க முடியாதது. வெகுநாட்களுக்குப் பிறகு ரசித்து, லயித்து, அனுபவித்து, வியந்து படித்த நாவல் காடு. இதுவரை படித்த ஜெயமோகன் நாவல்களில் காடு எனக்கு மிகவும் பிடித்த நாவல் மட்டுமல்ல மிகச்சிறந்த நாவல் என்றும் உறுதியாகச் சொல்லலாம்.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/06/blog-post.html#sthash.CF0yIFdR.dpuf

காடு அருண்மொழித்தேவன்

காடு - ஜெயமோகன்

ஏழாம் உலகம் புத்தகம் படிக்கும் வரை எனக்கு ஜெயமோகன் எழுத்தின் ஸ்பரிசம் அவ்வளவாக இல்லை. இணையதளத்தில் படிப்பதோடு நிறுத்திவிட்டேன், ஏதோ ஒரு ஊந்தலில் வாங்கிய ஏழாம் உலகம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது அவ்வளவு நெருக்கமாக ஒரு நாவலை நான் வாசித்தது இல்லை என்பதால் உண்டான உணர்ச்சி அது. அதற்கு எந்தவிதத்திலும் சோடை போகாத நாவல் காடு. 

     நாவலின் தலைப்பே சொல்லிவிடும் கதை எங்கு பயணிக்க போகிறது என்று. ஒரு பதிவரிடம் ஜெயமோகன் எழுத்துகள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஜெயமோகன் எழுத்தை படிக்கும் போது அவர் நமது கையை பிடித்து அந்த இடங்களை அழைத்து செல்வது போல இருக்கும் அவ்வளவு நெருக்கமான படைப்புகள் எல்லாம் என்றார். காடு படிக்கும் போதே அவர் சொன்னது அத்தனையும் உண்மை என்று புரிந்துகொண்டேன் நன்றி மணிஜி 

    கிரிதரன் தனது மகன் சிவராமனின் மகளை கட்டி குடுத்த ஊருக்கு செல்கிறார். செல்லும் வழியில் தான் வேலைசெய்த சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் கடக்கும் போது முன்பு அதே இடத்தில வேலை செய்த போது ஒரு கல்வெட்டில் தனது பெயரை எழுதி வைத்ததை நினைவுப்படுத்தி அங்கே சென்று பார்க்கிறான். அங்கு அவன் பெயர் மட்டும் அல்ல ஒரு மிளாவின் கால்தடமும் பதிந்து உள்ளதால் அதை காணவேண்டி அங்கே செல்கிறான். 

   கிரி வீட்டிற்கு ஒரே பிள்ளை அப்பா ஜோசியம் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டு வாழ்கையை ஒட்டி கொண்டு இருப்பவர். அம்மா தான் குடும்பத்தை காப்பாற்றி கொண்டு இருக்கிறாள். தனது அண்ணனிடம் மகனை வேலைக்கு சேர்த்து விடுகிறாள். கிரிதரனை காட்டில் நடக்கும் அவரின் கட்டுமான வேலையை மேற்பார்வையிட அங்கு அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில நீலி என்கிற மலைசாதி பெண்ணிடம் காதல் கொள்கிறான்,  விஷ காய்ச்சலால் நிலி மரணம் அடைகிறாள் அதன் பிறகு வேணியை கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை வெல்ல முடியாமல் துவண்டு போய் ஒரு வழியாக முன்னேறுகிறான்.

    கிரிதரன் காடுகளில் எப்படி வாழ்ந்தான், பயந்து நடுங்கிய நாட்கள், பயமே இல்லாமல் கழித்த இரவுகள், குட்டப்பன், ரொசாலம், குருசு, நீலி என்கிற ஆதிவாசிபெண்,  மாமாவின் மனைவி, மாமனின் மகள் வேணி, ரெஜினா, சினேகம்மை, அய்யர் என்கிற என்ஜினியர்யுடன் ஏற்பட்ட நட்பு மற்றும் சிலர்..  இவர்களில் யாராவது ஒருவர் இவனுடன் பயணித்து கொண்டே இருகிறார்கள்.


   ""ராத்திரியில காடு ஒரு பெரிய கொண்டாட்டமா மாறிடும். உண்மையில் ராத்திரிதான் காடு முழிச்சுக்குது. மனுஷங்க போத்திட்டு துங்குறாங்க""

   கிரிதரன் முதல் முறை காட்டில் வழிதவறி சென்றுவிடுகிறான், வழிதவறிய பிறகு அவனிடம் ஏற்படும் பயம் எப்படியாவது அங்கு இருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்று பதறும் இடம் நம்மையும் சேர்த்தே தோற்றி கொள்கிறது, முதலில் ஏற்பட்ட அந்த பயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி காட்டில் இரவில் தனியாக சுற்றும் அளவுக்கு தேறிவிடுகிறான். முதலில் பன்றி கூட்டதை பார்த்து பயந்தாலும், பிறகு ஒரு இரவில் யானைகளுக்கு நடுவே மாட்டி கொண்டு சாமர்த்தியமாக தப்பித்து கொள்கிறான். காட்டில் தனியா செல்லும் அளவுக்கு தைரியத்தை நீலி மீது ஏற்ப்பட்ட காதலால் தான் என்று சொல்லலாம். இளமையில் இரவில் காட்டில் தனியா சுற்றி அலையும் கிரிதரன் வயதான பின்னால் இருட்டாக இருக்கும் சாலையை கடப்பதற்கு மிகவும் பயந்து நடுங்குகிறான். யாரவது ஒருவர் துணை இல்லாமல் அந்த இடத்தை கடந்து போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். 


      அம்மா சொன்னாள் என்கிற ஒரே காரணத்திற்காக வேணியை கல்யாணம் செய்துகொள்கிறான். ஆரம்பத்தில் இருந்தே வேணியை வெறுப்பவனாக இருக்கும் கிரிதரன் சொத்துக்காக அவளை கல்யாணம் செய்ததாக மற்றவர்கள் சொல்வதை கேட்டு நிறைய குழப்பம் அடைகிறான், பிறிதொரு நாளில் அவளை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேணியே இந்த கேள்வியை அவனிடம் கேட்கிறாள். வேணியை கல்யாணம் செய்துகொண்டாலும் அவளின் அம்மா கிரிதரனை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள்.    

        
     கிரிதரன் மற்றும் குட்டப்பன் வாயிலாக காட்டை விவரித்து இருக்கிறார் ஜெமோ. முதல் தடவை காட்டில் தொலைந்து போன போது எப்படியாவது அங்கு இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவன் செய்யும் முயற்சிகளை விவரித்து இருந்த இடம் அருமை.  கிரிதரனுடன் வேலைசெய்யும் குட்டப்பன் வாயிலாக காட்டை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். காட்டில் எப்படி வாழவேண்டும் என்று குட்டப்பனை கேட்கலாம் அவ்வளவு விஷயம் உள்ளவனாக காடு பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்து இருக்கிறான். இரவில் காடு எப்படி இருக்கும் என்று விவரித்து இருக்கும் இடம் அவ்வளவு அழகு ரொம்பவே ரசிக்கும் படியான இடங்கள் அது. காடு என்றால் கொடிய மிருகங்கள் அதிகமாக இருக்கும் இடம் என்று நினைத்தேன். ஆனால் புத்தகத்தை படித்த வரை அப்படி ஒன்றும் கொடிய மிருகங்கள் இந்த காட்டில் வாழ்ந்ததாக தெரியவில்லை. வாழ்வின் அர்த்தங்களை அய்யர் மூலம் எளிமையாக சொல்லி இருக்கிறார்.

   காடு  பற்றி மட்டும் சொல்லாமல் மிஷனரிகள் செய்யும் மதமாற்று வேலையையும் இங்கே காண முடிகிறது. காட்டில் விஷ காய்ச்சல் வந்து நிறைய உயிர் இழப்புகள் நேரிடும் போது அவர்களுக்கு உதவுவதற்காக கீழே இருக்கும் வேறு ஒரு மிஷனரி மருத்துவமனை வந்து மருந்து வாங்க வருகிறான். இவனின் செயலை பார்த்து நீ மதம் மாறிக்கொள் என்று நேரடியாக கேட்கிறார்.

   இன்று நேற்று என்று நாவல் அங்கும் இங்குமாக மாறி மாறி பயணிக்கிறது உண்மையில் அட்டகாசமான திரைகதை போல உள்ளது அந்த கால மாற்றங்கள் எல்லாம். கதை நடக்கும் இடம் நாகர்கோயில் என்பதால் அந்த ஊரின் பாஷையில் தான் எல்லா கதாபாத்திரங்களும் பேசிகொள்கிறார்கள். இது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது பத்தியை படிக்கும் போது இருக்கும் வேகம் வசனங்கள் என்று வரும் போது வேகத்தடையை தாண்டும் வண்டியை போல மெதுவாக ஏறி இறங்கி செல்கிறது. ஏழாம் உலகம் படித்தால் கொஞ்சம் தடுமாற்றம் இல்லாமல் பயணிக்க முடிகிறது. 

    ஜெயமோகன் அவர்களுக்கு ஜாதிகள் மேல் ஏன் அவ்வளவு கோபமோ முடிந்த அளவு டாரு டாரா கிழிக்கிறார். உதாரணத்துக்கு "மேனன் சாதியினரில் 10ல் 9பேர் கடைந்தெடுத்த தேவிடியாபயல்கள். அந்த மீதி ஒண்ணு தெய்வம்" - இது எப்படி இருக்கு!!!!  


       இன்னும் நிறைய இருக்கிறது எழுத ஆனால் எல்லாவற்றையும் எழுதினால் நாவல் பற்றிய சுவாரசியம் குறைந்துவிடும். எந்த ஒரு நெருடலும் இல்லாமல் சுகமாக வாசிக்கலாம் அந்த அளவுக்கு அருமையானதொரு நாவல்.

   ஒரு நாவலை படித்து முடிக்கும் போது படிப்பவரின் கண்ணோட்டம் ஒவ்வொரு விதமாக இருக்கும். மேலே இருக்கும் அனைத்தும் காடு படித்து எனக்கு தோன்றியதை  எழுதி உள்ளேன். நாவல் படித்து பாருங்கள் வேறு ஒரு கண்ணோட்டத்தில் நீங்களும் எழுதலாம்.
http://romeowrites.blogspot.in/2010/11/blog-post_25.html

காடு -- ராஜராஜேந்திரன்

இது கொஞ்சம் பழைய உவமைதான், ப்ச்சுன்னு அலுத்துக்காதீங்க சீனியர்ஸ் :)  மெல்லிய மழைச்சாரல் பிசிறும் மாலைவேளையில் தவித்துக்கிடக்கும் நாக்கிற்குச் சூடான தேநீர் கிட்டி, அது சுவையாகவும் அமைந்து வாழ்நாள் முழுக்க நினைவிலும் தங்கிவிட்டால், என்ன ஓர் இன்பம் கிட்டுமோ, அப்படி ஒரு கிறக்கத்தைக் கொடுத்தது ’காடு’

நமக்குப் பிடித்த ஒரு கதைக்களமிருந்து, நாம் எதிர்பார்க்குமெல்லாமே அதிலிருந்தும் விட்டால், பிறகென்ன, அணு அணுவாய் ருசித்திட வேண்டுமல்லவா ?  அப்படித்தான் ஜெயமோகனின் காட்டையும் ருசித்தேனென்பேன்.  உடனே நீங்கள் உங்கள் பட்டியலில் காட்டைச் சேர்க்குமுன்பு ஓர் எச்சரிக்கை.  இதில் மொழியாடலில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாது, நாகர்கோயில் மலையாளமும் + கேரளத் தமிழும் கலந்த மிகக் கடினமான வட்டாரவழக்கை அப்படியே கொடுத்துள்ளார் ஜெமோ.

உதாரணத்திற்கு எசமான் எனில் ஏமான், வருடம் எனில் வரியம், ஏறாத = கேறாத, இதையெல்லாம் ஒருவர் விளக்கி புரிந்து கொள்ளாமல் வாசிக்க வாசிக்க நாமே புரிந்து கொண்டால்தான், இன்னும் சுவைக்கும்.  காடு, கடல், ஆறு, பச்சைபசேலென இருக்கும் நிலம் இதெல்லாம் பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும்தான் எனினும் ஒரு சிலருக்கு ஆழமாக பிடிக்கும்.  அந்த ஆழமான ரசிகனில் அடியேனும் ஒருவன்.  இதில் காடும், மலையும், மழையும், வருவதால் இந்த நாவலுக்கு அடிமையாகவே மாறிப்போனேன்.

நான் விமர்சனம் செய்யப்போகிறேன் எனப் பயந்து ஸ்கிப் செய்துவிடப்போகிறீர்கள், என் அனுபவத்தை மட்டுமே சொல்லப்போகிறேன்.  ஏற்கனவே இதிலிருந்து ஒரு வன நீலிக் கதையை முன்பே இங்கு பகிர்ந்துள்ளேன்.  அதை கீழே இந்த லிங்கில் போய் வாசிக்கலாம்.  ஓர் அத்தியாயத்தில் வரும் சில பக்கங்கள்தான் அவை.  ஆம், அதுதான் ஜெயமோகன்.
http://raja-rajendran.blogspot.in/2013/07/blog-post.html

சச்சின் எப்படி கிரிக்கெட் அடிமையோ, அதுபோல ஜெமோ எழுத்தின் அடிமை.  எழுத்து ’வா வா என்னை ஆளு’ என்று அவரை வாட்டிக்கொண்டே இருக்கும் போல.  முற்றுப்புள்ளியை மறந்து ஒரு சில பத்திகள் பக்கம் பக்கமாய் கூட நீளும். ஆனாலும் ஏனோ, இதில் அவருடைய எந்த ஓர் எழுத்தையும் கூட என்னால் தவிர்க்க முடியவில்லை.


மலை, காற்று, மழை, காடு, காட்டு மிருகங்கள், காட்டு அழகி, காடு பற்றிய புனைவுகள்(நீலி), காட்டின் பலம், பலவீனம், காட்டு பழங்கள், காடு தரும் உணவுகள், காடு தரும் பயங்கள், மலை மேல் இருக்கும் இக்காடுகளின் ஊடாக கீழிருந்து மலைக்கு பாதை போடும் கூலி மற்றும் ஒப்பந்தக்காரர்கள், அணை நிறுவும் பொறியாளர்கள், அவர்களுக்கு இயைந்து எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கும் சில பெண்கள், பண்பாடு போற்றும் நில மனிதர்கள் என களமும்,  கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள்.

’இந்த நாவலில் சாதி துவேஷத்தை குறியீடாக நிறுவியிருப்பார் ஜெயமோகன்’ என நண்பர் பிச்சைக்காரன் ஒருமுறை சொல்லியிருந்தார்.    ’ம்ஹூம், என் கண்ணிற்கு அப்படி ஏதும் புலப்படவில்லையே, எப்போது படித்தீர்கள் ?” என அண்ணனிடம் வினவினேன்.  ’ஒருமுறை என்னை மஞ்சக்காமாலை தொற்றியிருந்த ஓய்வுவேளையின் போது’ என்றார். (மஞ்சக்காமாலை என்பது இங்கு குறியீடா என்றெல்லாம் கேட்கக்கூடாது)

நடுத்தர வயது கதாநாயகன் கிரிதரன், தற்செயலாக தன் இளமையில் வேலைபார்த்த களத்தைக் கடக்க நேர்கிறது.  உடனடியாக பஸ்ஸை விட்டுக் கீழிறங்குபவன், தான் செய்த பணிக்களம் அதுதானா என நிறுவ, படிமங்களைத் (விழுமியங்கள்னு சொல்லனுமோ ?) தேடுகிறான். அது கிட்டி விடுகிறது.  மிளா(காட்டு மான்) கால்தடம் பதிந்த ஒரு சிமெண்ட் கல்வெர்ட்.  அப்படியே நினைவுகள் பின்னோக்கிச் சுழல, இளம்பிராய ராஜா அங்கே குட்டையில்...............ஆம், அப்போதே கதாநாயகனாக அங்கே என்னை நான் மாற்றிக் கொண்டேன்.

அடர்ந்த மலைக்காடுதான் கதைக்களம்.  மலை மேல் காட்டினிடையே சிறு, சிறு தடுப்பணைகள் கட்ட ஓர் ஒப்பந்தக்காரர் பணிகளை மேற்கொள்ளுகிறார்.  அவருடைய மருமகன்தான் கிரிதரன்.  அவருடைய தலைமை மேஸ்திரி குட்டப்பன்.  மேஸ்திரியின் உதவியாளர்கள் குருசு, ராசப்பன், சினேகம்மை, ரெசாலம், ரெஜினாள், இதுபோக, பொறியாளர் ஐயர் & மேனன், மேனனின் செழிப்பான ஆளுமைமிக்க மனைவி, கிரியின் மலையாள மாமி, அழகான மாமிக்கு பிறந்த கோரமான மகள்(கிரியின் மனைவி) மாமியுடன் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படும் புலையன், ரெசாலம் வளர்க்கும் தேவாங்கு, அப்புறம் கிரியின் காதலியாக வரும் மலையத்தி, இன்னும் சில கதாபாத்திரங்கள்.  ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் தொடர்புள்ள அருமையான பாத்திரங்கள்.

நாவல் எழுத விரும்புபவர்கள் நிச்சயம் இந்தக் காடை வாசிக்க வேண்டும்.  ஒரு புனைவு நாவல் எப்படி அமையவேண்டும் என்பதற்கு காடு ஒரு சிறந்த கையேடு.  நாவலில் ஜெயமோகன் மீது கடும் விமர்சனமாய் வைக்கப்படும் இந்துத்துவ கருத்துகள் இதில் குட்டப்பன் மூலமும், சினேகம்மை மூலமும் சொல்லப்படுகின்றனதான் என்றாலும் அதில் சிறிதும் மிகையில்லை, அவ்வளவு யதார்த்தமாய் கடந்து செல்லும்.

இதுவரை இதை வாசிக்காதவர்களுக்கும் புரியும்படி எழுதிவிட்டேன், இனி வாசித்தவர்களுக்கு மட்டுமே புரியுமென நினைக்கிறேன்.

கிரி, காட்டுமழையில் நனைந்துக் கொண்டு, அடர்ந்த இருளில், வனங்களில் உலவுவதைப் போலவே உணர்வுப்பூர்வமாய் நானும் அலைந்து திரிந்துக் கிடந்தேன் !

கரு நீலியின் பரிசுத்தக் காதலில் கிறங்கி மகிழ்ந்தேன் !

குட்டப்பனின் கைமணத்தில் பச்சைப்பயிறு போட்ட கஞ்சியை சுடச்சுடப் பருகினேன் !

சினேகம்மையின் புறங்கழுத்தை என் பற்களால் மெல்ல கடித்து பின் அய்யர் போல் பார்த்து ரசித்தேன் !

ரெசாலத்தின் தேவாங்கை, சிறுத்தை கவ்விக் கொண்டு போனபோது, நானும் கூட, ‘மக்களே,மக்களே’ எனக் கதறியழுதேன் !


மாமியின் வெண்ணிறமும், மேனன் மனைவியின் கைகொள்ள்ளா மார்புகளும் கண்முன்னே காட்சியாய் ரசித்திருந்தேன் !

அய்யரின் கபிலர் என்னையும் வந்தென்னை வாசிடா என அழைக்கக் கண்டேன் !

தனியே காப்பாற்ற மன்றாடிய கீரிக்காதனின் மருண்ட பரிதாப விழிகளில் என் கண்ணீர்தான் வழிந்துக் கொண்டிருந்தது.

காட்டுராஜா புலியோ, சிங்கமோ அல்ல, அது யானைதான் என குட்டப்பன் யானையை வர்ணிக்கும்போது, யானையின் கம்பீரம் உச்சம் தொடுகிறது.    காட்டை ரசிக்குமெனக்கு அந்தக் காட்டுராஜா யானையால் மிதிபட்டு இறந்தால் சொர்க்கம் புகுவேன் என குட்டப்பன் மெய்சிலிர்க்கிறான்.  ஹாஹா, அடுத்த வருடமே அவனுக்கு மோட்சம் கிட்டிவிடுகிறது.  கிட்டியச் சாவு எல்லோருக்கும் கிட்டுமாயென்ன ?  குட்டப்பன் பேரதிர்ஷ்டசாலி :)

http://raja-rajendran.blogspot.in/2013/11/blog-post.html

காடு -ஷகி

ஜெயமோகனின் காடு அவரது ஐந்தாவது நாவல். கனவையும் வாழ்வின் யதார்த்தத்தையும் ஊடும் பாவுமாக நெய்து படைக்கப்பட்ட நாவல் காடு.”ஏய் வாசகா உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்” என்கிறது நகுலனின் கவிதை வரியொன்று. நான் பார்த்த காடு தான் எனது. அதைத்தான் எனது விமர்சனமாகவும், விவாதமாகவும் முன் வைக்கவியலும்..ஆரோக்கியமான விவாதங்கள் இலக்கிய உலகில் வரவேற்கப் படும் என்ற நம்பிக்கையுடன்..
காட்டில் சாலையிடும் கல்வெர்ட் கான்டிராக்ட்  எடுத்துள்ள மாமனின்ஆணைக்கு இணங்கி ,தன் தாயின் விருப்பம் என்பதாலும்…கான்டிராக்ட் கணக்கு வழக்கு பார்க்கவென காட்டில் நுழைகிறான் நாயகன் கிரிதரன்.
பணியாள் குட்டப்பன்... கதை நெடுகிலும் நம்மைக் கவரும் பாத்திரம், சமையல் , காடு பற்றின சகல அறிவும், வேலையாட்களிடம் வேலை வாங்கும் திறன், சக மனிதர்களிடத்தான அன்பு, மாறாத மன மற்றும் உடற்திறன் என்று ஒரு ஹீரோவுக்கான அத்துணை அம்சங்களும் பொருந்தின ஒரு கதாபாத்திரம்.
ரெசாலம், குரிசு, சினேகம்மை, ரெஜினாள் ,ராபி ,ஆபேல்-இரட்டையர்கள் என்று வேலையாட்கள்.
காட்டின் மீது அதீதமான ஆர்வம் இழுக்க ,உலவச் சென்ற நேரம், ஒரு மரத்தினடியில் கண்ணயர்ந்து விடும் கிரிதரன், கனவா நினைவா என்றே உணரவியலாத அச்சுறுத்தும் ஒரு மனப் பதட்டத்துக்கு ஆளாகிறான் . காடு பற்றி மட்டுமல்லாமல், தம்புரான் கதைகள் பலவும் அறிந்த குட்டப்பன் அடங்காக் காமப் பசி கொண்டலைந்த வன நீலியொருத்தி காஞ்சிர மரமொன்றில் ஆணி அறையப்பட்டு கட்டுண்டு இருக்கும் கதையைச் சொல்ல, கிரியின் மனதிலும் நீலியை இருத்தி கூர் ஆணி கொண்டு அறையப்படுகிறது. எத்தனை தான் பயமும் பதட்டமும் இருந்தாலும் காட்டின் ஓயாத அழைப்புக்கிணங்கி மீண்டும் மீண்டும் காட்டினுள் புகுகிறான் கிரி.
நீரோடை ஒன்று சிற்றருவியாகவிழும் இடத்தில் ,குளிக்கவென அமர்ந்திருந்த பேரழகு , மலையத்தி ஒருத்தியைப் பார்த்த மாத்திரத்தில் காதலும் கொண்டு விடுகிறான். அவள் யார் என்னவென்ற விபரம் ஏதும் அறியாத போதிலும், மீண்டும் சந்திக்க வாய்ப்பு அமையுமா என்றெல்லாமும் தெரியாத நிலையிலும் கூட ,மனதையும் உடலையும் சேர்த்துப் பிணைத்து …வேறொன்றையும் பெரிதென நினைக்க இடங்கொடாமல், நினைவில் கனவாகவும்..கனவில் நினைவே போலும் மயக்கும், வாழ்வில் ஒரே முறை வாய்க்கும் முதற் காதலின் உன்மத்தப் பிடியில் சிக்கி விடுகிறான்.
நீலி என்பது தான் கிரிதரன் காதல் கொண்டு விடும் மலை சாதிப் பெண்ணின் பெயர்.குட்டப்பன் கிரிக்குச் சொல்லும் வனநீலிக் கதை, மிகையான சொல்லாடல்களுடனானது என்றாலும், கதையில் அதன் பங்கு  பிரதானமானது. ஐய்யர் பாத்திரமும் , குட்டப்பனும் மட்டும் அவளைப் பற்றி பேசும் இடங்கள் இல்லையென்றால்…மனம் பிழன்ற நிலையில் கதாநாயகன் தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனைக் காதலி தான் நீலி என்ற அளவிலேயே வாசகனின் புரிதல் இருந்திருக்கும். மட்டுமல்லாமல் அவள் இறந்து பட்டாள் என்ற செய்தியை குட்டப்பன் சொல்லுமிடம் நமக்குப் பெரிதான அதிர்ச்சியொன்றும் ஏற்பட்டு விடாமல் அவளுடைய பாத்திரத்தோடே பிணைந்திருக்கும் ஒரு வன தேவதை தானோ அவள் என்ற மாயத்தோற்றம் காக்கிறது.
சில நாட்கள் மட்டுமே கிரியும் நீலியும் பேசிப் பழக சந்தர்ப்பம் அமைகிறது. கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால்….. பார்த்த மாத்திரத்தில், அவள் மேலாடை ஏதும் அணியாத நிலையில் தான், கிரி அவளிடம் காதல் கொண்டு விடுகிறான் என்ற போதும், பழகும் வாய்ப்பு கிட்டும் எந்த நேரத்திலும் அவர்களுக்கிடையே உடல் ரீதியிலான நெருக்கம் நேரவேயில்லை என்பது தான். உண்மையான காதலுக்கு உடல்களைப் பிணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தானா ஜெயமோகன் சொல்ல விழைவது?
கிரிதரனின் தாய்-—தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் எங்கேனும் சந்தித்திருக்கக் கூடிய ஒரு பெண் தான் இவள். தான் எடுத்து விட்ட முடிவில் திடமாய் இருப்பதும், எதற்கும் அஞ்சிவிடாத அவளுடைய துணிவும், கணவனை, மகனை தான் நினைக்கும் விதமாக ஆட்டி வைப்பதிலும் …யதார்த்தமான ஒரு பாத்திரப் படைப்பு.
ஐய்யர்-—பெண்கள் பற்றின இவரது ரசனையும், இலக்கியத்தின் பால் கொண்டிருக்கும் நாட்டமும், கதாநாயகனிடம் இவர் கொண்டு விடும் நட்பும் கதையின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
“இன்னும் சொல்லப்போனா எல்லா மோகினி, பேய்க் கதையிலயும் உள்ள இருக்கிறது பெண்ணோட காமத்தைப் பயப்படற ஆணோட கோழைத்தனம் தான். எல்லாப் பெண்ணிலயும் யட்சி உண்டு. மந்திரம் தெரிஞ்சவன் பயப்படமாட்டான்.” என்று ஐய்யர் கிரிக்கு அறிவுரை கூறுகிறார் ஓரிடத்தில். ஆசிரியர் பேசும் யட்சிப் பெண்கள் வெறும் புனைக்கதைகளில் பாத்திரமாக வரும் கனவா? இல்லை அவர் அறிந்து, பார்த்து, பயந்த நிஜப் பெண்களா? ஆண் , பெண் உறவுச் சிக்கல்களை அலசும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், இப்படிப் பட்ட அழுத்தம் திருத்தமான, எதிர்மறையான நிலைப்பாடுகள் அல்லது கருத்துத் திணிப்புகள் எதற்காக?
பெண்கள் பற்றின அழகு வர்ணனைகளிலும் சரி, அவர்களுடைய மன ஓட்டங்களை விவரிக்கும் இடங்களிலும் சரி , கடுமையான ஆணாதிக்க சிந்தனை விரவிக் கிடப்பதை ஆசிரியர் அறிகிறாரா? நாயகன் காதலியின் அழகை எண்ணி மயங்கும் போதே, நாட்டில் வாழும் மங்கையரின் குறைகளாகக் கருதும் பொன்னிறத்தையும், தளர்ந்த உடற்கட்டையும் விவரித்து ,அவன் மீதே பெரும் எரிச்சலை வாசகனுக்கு உண்டாக்குகிறான். அழகின் மீது இத்தனை காதல் கொள்ளும் கிரியின் மனைவி, அவன் மாமன் மகள் வேணிஅவலட்சணத்தின் மொத்த உரு என்பதும் முக்கியமான செய்தி.
நாம் அறிந்தேயிராத காட்டை நம் கண்களின் முன் விரியச்செய்வதிலும், ஒரு மிளாவை, யானையை, பலா மரத்தை, ஆற்றை, தேவாங்கை, குரங்கை,கொன்றை மரத்தை, கதாபாத்திரமாக நினைக்க வைப்பதிலும், ரெசாலம் ஒரு தேவாங்கின் மீது கொண்டு விடும் அதீதமான பாசம் ஏன் என்று வாசகனுக்குப் புரிய வைக்கும் இடத்திலும் ஒரு தேர்ந்த கதைசொல்லியாக சரசரவென விஸ்வரூபம் எடுக்கிறார் ஜெயமோகன். கிருத்துவ மதம் பற்றி மிகுந்த கிண்டல் தொனிக்கும் வசனங்கள் பல உள்ளனவே என்று வாசகன் உயர்த்தும் புருவத்தை நீவி விடும் படியாக..அதே கிறித்துவ பாதிரியும், மருத்துவரும், செவிலிமாரும் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்பவர்களாகக் காட்டியும், அம்மதம் மலைவாழ் மக்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஊடாக எழுதிவிட்டிருக்கிறார்.
கதை நெடுகிலும் குமட்ட வைக்கும் ஏசும் வார்த்தைகள், பாத்திரமாக வரும் முக்கால்வாசிப் பெண்கள் அடங்காக் காமம் கொண்டலைபவர்களாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதும் என்று முகஞ்சுளிக்க வைக்குமிடங்கள் ஏராளம்.ஜெயமோகனின் பல கதைகளிளும் போலவே இதிலும் பெண் என்பவள் ஏதோ மிஸ்டீரியஸான, அச்சம் தருபவளாக, எளிதில் திருப்தி அடைந்து விடாத ஒரு பிறவியாகவே புனையப்பட்டிருகிறாள். கதையின் போக்கெங்குமே கதாநாயகன் பெண்களால் பாலுறவுக்காகக் கட்டாயப்படுத்தப்படுபவனாகவே இருக்கிறான். இதென்ன ஆண் இனத்தின் ஆழ் மன ஆசையின் ஒரு நீட்சியா? இல்லை யதார்த்தம் என்பது தான் ஆசிரியர் சொல்லும் பதிலா? ஒப்புக்கொள்ளவே முடியவில்லையே! ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை வன்புணர்ந்துவிட இயலும்..ஆனால் ஆணுக்குத் தான் இயற்கையே பாரபட்சமான ஒரு வசதி வழங்கியிருக்கிறதே? எந்த ஒரு இடத்திலும் தானாக ஒரு முடிவு எடுக்காதவனாகவும், கோழையாகவுமே தோன்றும் கிரி அப்படியொன்றும் மனதைக் கவரும் விதமானவனாகவும் இல்லை..ஆனாலும் அவன் மாமியிலிருந்து, அடுத்த வீட்டுப் பெண், எஞ்சினீயர் மனைவி என்று அவனைக் காமுறும் பெண்களாகவே காட்டப் படுவதை சகிக்கவே இயலவில்லை.
எந்தப் பெண்ணைப் பற்றின குறிப்பென்றாலுமே நாவல் முழுவதும் அவளுக்கு இன்னாருடன் தொடர்பு என்று சர்வசாதாரணமாக சொல்லப்படுகிறது. ரெஜினாளுக்குப் பதிலாக வேலைக்கு வரும் எடத்துவா மேரி என்னும் பெண்ணைப் பற்றி “அவளுக்கு கற்பும் பணம் போல கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் தான்” என்னும் வரி கூட பாத்துக்கோ நானொன்னும் எல்லாப் பெண்களையும் பற்றி அப்படிச் சொல்லல என்பது போலத்தான் இருக்கிறது.
ரெசாலத்தின் மனைவிக்கு கிரியின் மாமனோடு தொடர்பு இருப்பதும்  பிள்ளை போல் வளர்த்த தேவாங்கை சிறுத்தை கவ்விச் செல்வதில் மனம் தடுமாறி வீட்டில் கொண்டு விடப்படும் ரெசாலம், கிரியின் மாமனைக் கொல்வதுமாக  இன்னொரு கள்ளத்தொடர்பும் அதன் விளைவும்.இம்மாதிரியான தொடர்புகளும், காம விகாரங்களும் நம் சமூகத்தில் இல்லை என்று சொல்வதற்கில்லை என்றாலும் இத்தனை அழுத்தமான , விகாரமான, காமம் பற்றின நிலைப்பாடு, யதார்த்தம் என்ற பெயரில் தேவைதானா? காடு என்பதே நம் ஆழ் மனம் பற்றினதான ஒரு குறியீடு தான் என்றும் அதன் நிலைப்பாடுகளில், விகாரங்களில், குரூரங்களில், தன்மைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விவாதிப்பது தான் நாவலின் நோக்கம் என்று விட்டாலும் கூட அதிகமான ,மிகைப்படுத்தல் தெரிகிறது காமம் பற்றின கண்ணோட்டத்தில்.
காடும் ,காட்டில் வாழும் எண்ணற்ற உயிரினங்களும் மனிதனின் பேராசைக்குப் பலியாவதை கதையின் ஓட்டத்தில் சொல்லி சூழலியல் எச்சரிக்கை ஒன்றை அறைகூவுகிறார் ஜெயமோகன்.
நிகழ்காலத்திலும் இறந்தகாலத்திலும் ஏக நேரத்தில் பயணிக்கும் கதையோட்டம், ஒரு தேர்ந்த இயக்குநரின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் போல வெகு கச்சிதம். கிரியும் நீலியும் குறிஞ்சிப் பூவைப் பார்க்கப் போகும் இடம் கதையின் போக்கில் அடடா என்று வியக்க வைக்கும் இடங்களில் ஒன்று. என்னவோ ஏதோவென்று குறிஞ்சியைப் பற்றி ஏக எதிர்பார்ப்பில் இருக்கும் கிரி இந்த அபத்தமான பூவை ஏன் மலையும் மலை சார்ந்த இடத்திற்கான அடையாளமாகக் கற்பனை செய்தார்கள் என்று ஏங்குவது அற்புதமான ஒரு மனவியல் கூற்றை போகிற போக்கில் சாதாரணமாகச் சொல்லி விடும் ஒரு வரி.எத்தகைய ஓர் அபூர்வ நிகழ்வாக குறிஞ்சி மலர்வதைக் கொண்டாடுகிறான் மனிதன்…ஆனால் அப்படியொன்றும் பூலோகத்தில் இல்லாத ஓர் பொன்மலராக அது இல்லை என்பது ஏமாற்றம் தந்துவிடம் ஒரு விஷயம் தானே..யதார்த்தம் என்பதும் அப்படிப்பட்டது தானே? ஒரு வன தேவதையாக, பெண்ணல்லாத ஏதோ ஒரு மாயப் பொருளாக, காணக் கிடைக்காத ஒருத்தியாகவெல்லாம் நீலியைக் கற்பனை செய்து வந்த கிரி அவளும் சாதாரணப் பெண் தான் என்று உணர்ந்து கொள்ளும் ஒரு கணம் அது. மனதிற்குள் பெருங்கனவாக, உன்மத்தம் கொண்டுவிடச் செய்யும் ஒரு உணர்வு… கனவு நிலையை விட்டு வெளியே வந்து விட்டால்…நீர்த்துப் போய் விடுவதை வாழ்நாளில் ஒரு முறையேனும் அனுபவிக்காதவர்கள் யார்?
கதையின் ஓட்டத்தில் கிரியின் தொழிலில் பெரும் நட்டம் ஏற்படுவதும், மனப்பிழற்வின் விளிம்புக்கு அவன் சென்று மீள்வதுமாகவும், நீலியைப் பற்றின கனவுகள் அவன் வாழ்வு முழுவதும் தொடர்வதுமாக செல்கிறது.
ஜெயமோகன் எழுத்தில் எப்போதும் காணப்படும் குமரி மாவட்டத்து மலையாளம் கலந்த அழகுத் தமிழ் கதையின் மொழியாகி வசீகரிக்கிறது..அதே போல அவரது கதைகளில் எப்போதும் உலவி வரும் யட்சிகளும், நீலியரும்காட்டிலும் நடமாடி ஒரு கனவு நிலைக்கு வாசகனைக் கொண்டு செல்கின்றனர். கம்ப ராமாயணமும், குறுந்தொகையும் அடிக்கடி கையாளப்பட்டு ஆசிரியரின் மொழி அறிவையும், கதை மாந்தரின் இலக்கிய ஆர்வத்தையும் உணர்த்துகின்றன.
ஆசிரியர் ஒரு போத மயக்கத்தில், ஒரு கிளர்ச்சியுற்ற நிலையில் மட்டுமே இந்தக் கதையை,அதுவும்  ஒரே மூச்சில் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று வாசகனை நம்பவைக்கின்றது , ஒரு காட்டாறுக்கிணையாகப் புரண்டோடும் கதையின் நீட்சி. வாசகனும் அடித்துச்செல்லும் காட்டாற்றுக்கு ஈடு கொடுத்து ஒரு பெரிய மனப்பிழற்வை எதிர்கொள்ளும் விதமாகக் காட்டில் புரண்டு எழுகிறான்.
http://moonramkonam.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

காடு -வனத்தின் மணம்

உண்மையாகவே ஏதோ ஒரு காட்டினுள் சென்று வந்த உணர்வு. ஒருவன் தன் இளமை பருவத்தில் காட்டில் உள்ள தன் மாமாவின் கல்வெர்ட் கட்டுமானவேலைக்கு உதவியாக செல்கிறான். அங்கு இருக்கும் காலத்தில் காடு, காட்டில் உள்ள மனிதர்கள், மிருகங்கள் என அனைத்தோடும் அவன் கொண்ட உறவை பற்றி உரைக்கும் நாவல், காடு . தென் தமிழக பேச்சுமொழியில் உள்ள உரையாடல்கள், படிக்கும் பொழுது மனதிற்குள் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றன.
தன் அன்னையோடு கொண்ட சண்டையினாலும் தன் மாமாவின் அழைப்பினாலும், கல்வெர்ட் வேலைக்கு செல்கிறான் கிரிதரன். அங்கு குட்டப்பனின் பொறுப்பில் அவன் இருக்க, கல்வெர்ட் வேலைகளின் கணக்கு வழக்குகளை அவன் பொறுப்பில் விட்டு செல்கிறார் அவன் மாமா. காட்டினுள் சிறிது சிறிதாக உலாவும் அவனோடு சேர்ந்து நம் மனதையும் உலாவ விடுகிறார் ஜெயமோகன். காட்டிற்கு உள்ளே அவன் செல்லும் பொழுது அவர் கொடுக்கும் விவரங்களில் மனதை செலுத்தினால் நாமும் அவனோடு சேர்ந்து நடப்பதை போன்று உணர முடிகிறது.
அங்கு அவன் குட்டப்பனின் காட்டை பற்றிய தகவல்களை கண்டு வியக்கிறான். நீலியை காணும் அவன் அந்த முதல் சந்திப்பிலேயே தன் மனதை அவளிடம் பறிகொடுக்கிறான். அவளை பற்றி குட்டபனிடம் கேட்டு தெரிந்து கொண்டாலும் தன் காதலை அவனிடம் கூற விரும்பாத அவன், பின்னாளில் என்ஜினீயர் ஒருவரிடம் கூறுகிறான். அவரோடு தான் கற்ற குறுந்தொகை பாடல்களையும் இன்ன பிற பாடலகளையும் பாடி அதில் வரும் கருத்துக்களை அவரோடு கலந்துரையாடி இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள்.
பின்னர் நீலியோடு ஏற்படும் காதல், ரெசாலம் கண்டெடுக்கும் தேவாங்கு, அதனை கவ்வி செல்லும் சிறுத்தை புலி, வேலைக்கு வரும் ராபி, ஆபேல் என அனைவரும் நம் மனதினுள் தங்குகிறார்கள். கிரிதரன் தன் மாமாவின் மகள் வேணியை தான் திருமணம் செய்து கொண்டான் என்று முதலிலேயே தெரியவருவதால் நீலியுடனான காதல் தோல்வியில் தான் முடியும் என்று ஊகிக்க முடிகின்றது. இருந்தாலும், அது மலை ஜாதி பெண் என்பதால் தான் என்று நினைத்திருக்கும் பொழுது, உண்மை காரணம் நம் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது. அந்த நிகழ்வை நாம் எதிர்பாராத பொழுது கூறுவது அருமை.
ரோடு போட வரும் அரசாங்க ஊழியர்கள் காட்டினை அழிக்கின்றார்கள். இத்தகைய வேலைகளின் போது அழிக்கப்படும் மரங்கள் எல்லாம் விற்க்கபடுவதை சுட்டி காட்டியுள்ளார் ஜெமோ. இதனை பார்க்கும் பொழுது, நம் நாட்டில் பல மலை ரோடுகள் இட்டு அதற்காக பாராட்டும் பெற்றுள்ள ஆங்கிலயே அரசு, அதில் எத்தனை சந்தன மரக்காடுகளையும் அறிய மரங்களையும் அழித்தார்களோ, அதில் எதனை லட்சங்கள்/கோடிகள் தேற்றினார்களோ என்று என்னும் பொழுது, இதில் அவர்கள் நமக்கு அளித்ததை விட எடுத்தது தான் அதிகமோ என்று தோணுகிறது.
பெங்களூரில் இருக்கும் குளிரும் இந்த காட்டில் உள்ள குளிரும் ஒத்துபோகிறது என்றே கூறலாம். அதிலும் இரவினில் படிக்கும் பொழுது மலை மழையில் நனையும் கிரிதரனை விட நமக்கு அதிகம் குளிர்கிறது.அதற்கு ஆசிரியரின் திறைமை காரணம். கிரி மழையில் நனைந்தால் நமக்கு குளிரும் அளவிற்கு அதனை விவரித்துள்ளார்.அவர்கள் குடில் அருகே உள்ள அயனி மரமும், மதம் கொண்ட யானையான கீரக்காதனும், இரு தலைமுறை மிளாக்களும் (மான்கள்), கொட்டி தீர்க்கும் அடைமழையும், குட்டப்பனின் சமையல்களும், ஜெமோவின் எழுத்தும் ஒரு வனத்தை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.
முதல் பக்கத்தில் தனியாளாக நுழையும் நாம், கிரிதரனோடு சேர்ந்து அவன் அன்னையோடு சண்டையிடுகிறோம். பின்னர் அவனோடு சேர்ந்து குடிலில் வசித்து, குட்டப்பன் சமைத்ததை சாப்பிட்டு, நீலியை காதலித்து, ரெசாலதிடம் பைபிள் வாசகங்களை கேட்டு, எஞ்சிநீயருடன் பழைய பாடல்களை கேட்டு, கீரக்கதனை பார்த்து பயந்து, புலியின் வாயில் இருக்கும் தேவாங்கை பார்த்து பரிதாப பட்டு, நீலி இறந்த செய்தி கேட்டு துக்கப்பட்டு நாம் கிரிதரனின் உடலில் வாழும் மற்றொரு உயிராக மாறுகின்றோம். கதையை முடிக்கும் தருவாயில், நாம் காட்டை விட்டு வெளியில் வருவது போலவும் குட்டப்பனும் ரெசாலமும் மாமாவும் ஐயரும் தேவாங்கும் நீலியும் காட்டின் உள்ளே இருந்து நம்மை வழி அனுப்புவது போலவும் உள்ளது.
http://kmanikandan.wordpress.com/2010/12/16/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/

காடு-ஜெகத்- 2

ஜெயமோகனின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படித்து அவர் மீது ஏற்பட்ட மதிப்பின் காரணமாக அவருடைய புனைவு அல்லாத எழுத்துக்களையும் தேடிப் படிக்கத் தொடங்கினேன். திண்ணை மற்றும் மரத்தடி இணையதளங்களில் அவர் எழுதியிருந்த ஏராளமான கட்டுரைகள்/கடிதங்கள், 'சங்கச்சித்திரங்கள்', 'வாழ்விலே ஒரு முறை' ஆகிய கட்டுரைத் தொகுப்புகள் போன்றவை இதில் அடங்கும். அவரது உழைப்பும், வாசிப்பின் அளவும் சொல்ல வரும் சிக்கலானக் கருத்துக்களைக் கூட மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் எழுத்தாற்றலும் பிரமிப்பூட்டுவதாக இருந்தாலும் அவரது பல கருத்துக்களும் நிலைபாடுகளும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன.

*****

மரத்தடி இணையதளத்தில், மாய யதார்த்தப் பாணியில் தமிழில் எழுதப்பட்டப் படைப்புகளைக் குறித்துக் கேட்ட ஒரு வாசகருக்கு ஜெயமோகன் பதிலளிக்கையில், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சிலர் இந்த பாணியில் எழுதிய கதைகளைப் பட்டியலிட்டுவிட்டு "இவற்றை ஒட்டுமொத்தமாக அவற்றின் காகித மதிப்புக்கூட இல்லாத குப்பைகள் என்றே சொல்வேன்" என்கிறார். (பின்னர் இந்த இணைய விவாதங்கள் 'எதிர்முகம்' என்ற பெயரில் புத்தகமாக வந்தபோது சில சொற்களை நுட்பமான முறையில் மாற்றி இந்த வாக்கியத்தின் கடுமையைக் குறைக்க முயன்றிருப்பதைக் கவனித்தேன்). சக எழுத்தாளனின் பலநாள் உழைப்பில் உருவான ஒரு ஆக்கத்தை குப்பை என்றுக் குரூரமாகத் தூற்றுவதைப் பற்றி ஜெயமோகனிடம் கேட்டால் ஒரு திறனாய்வாளன் 'கறாராக' 'சமரசமற்று' இருக்கவேண்டும் என்றுச் சொல்லக்கூடும். ஆனால் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரை குப்பை எது கோமேதகம் எது என்றுப் பகுத்தறிய அவர் என்ன அளவுகோல் வைத்திருக்கிறார் என்பதே முக்கியமானக் கேள்வி.

இலக்கியக் கருத்துக்கள் அகவயமானவை என்றும் அவற்றை புறவய நிரூபண முறைகளைப் பயன்படுத்தி உண்மையென நிரூபிக்கவோ பொய்ப்பிக்கவோ முடியாது என்றும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வேறு தளங்களுக்கும் இது பொருந்தும். ஐஸ்வர்யா ராயை விட நந்திதா தாஸ் அழகானவர் என்ற கருத்து பெரும்பாலானவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்தாலும் அந்தக் கருத்தைக் கொண்டிருக்கவும் விவாதங்களில் முன்வைக்கவும் எனக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தக் கருத்து முற்றிலும் அகவயமானது என்பதையும் அதை ஒருபோதும் நிரூபிக்க முடியாதென்பதையும் நான் அறிந்திருக்கும் நிலையில் என்னுடன் முரண்படுவோர் அறிவிலிகள் என்றோ அவர்களுடையக் கருத்துக்கள் குப்பை என்றோ நான் மட்டம் தட்டக்கூடாது. ஆனால் இலக்கியப் படைப்புகளைக் குறித்த விவாதங்களில் ஜெயமோகன் அதைத் தான் செய்கிறார்.

தன்னுடைய நாவல்கள் தவிர்த்து தமிழில் இதுவரை எழுதப்பட்ட அனைத்து நாவல்களிலும் முதன்மையானதாக ஜெயமோகன் அடையாளம் காட்டுவது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலை. தமிழ் தேசியவாதத்தை நையாண்டி செய்யும் பல பகுதிகளை உள்ளடக்கிய இந்த நாவல் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் சமீபகாலம் வரை எந்த கவனிப்பையோ அங்கீகாரத்தையோ பெற்றிருக்கவில்லை. ஜெயமோகனுக்கு இப்போது இந்த நாவலைக் கொண்டாடுவதில் உள்ள ஒரு சிரமம் என்னவென்றால் அவர் கடந்த காலங்களில் இந்த நாவலை தட்டையான சாகச நாவல் என்று பலமுறை நிராகரித்திருக்கிறார். முதன்முறை வாசித்தபோது உருவான இக்கருத்து பின்பு "நாவல்" என்ற நூலை எழுதுவதற்காக அதை மறுபடி படித்தபோது மீண்டும் உறுதிப்பட்டதாக எழுதியிருக்கிறார். தமிழின் முதன்மையான நாவலை இரண்டு முறை (அதுவும் நாவல் என்ற வடிவத்துக்கு இலக்கணம் எழுதுமளவுக்குத் தன்னம்பிக்கை பெற்றப் பிறகு) வாசித்தும் நிராகரிக்கும் அளவிற்குத் தான் அவரது திறனாய்வு அளவுகோலின் நம்பகத்தன்மை இருக்கிறதென்றால் ஒரு படைப்பைக் "காகித மதிப்புக்கூட இல்லாத குப்பை" என்றுக் கரி பூசுவதற்கு முன் சற்று யோசித்திருக்கவேண்டாமா?

கறாராக விமர்சிக்கிறேன் என்ற பேரில் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளிகளைக் குறித்து துச்சமாக ஏதாவது சொல்வதை ஜெயமோகன் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார். உண்மையில் தமிழில் இதுவரை எழுதியவர்களில் தன்னை விடச் சிறந்த எழுத்தாளர் எவரும் இல்லையென்று ஜெயமோகன் உறுதியாக நம்புவது போல் தான் தெரிகிறது. கடந்த நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் ஆகச் சிறந்ததாக விஷ்ணுபுரத்தையும் அதற்கு அடுத்தபடியாக பின் தொடரும் நிழலின் குரலையுமே அவர் முன்வைக்கிறார். மலையாளத்திலும் எழுதிவரும் அவர் அங்குள்ளது போல் ஒரு அறிவுச் சூழல் தமிழில் உருவாகவில்லை என்கிறார். இது உண்மையாகவே இருக்கலாம். அதற்காக தமிழ் சூழலில் தன்னுடன் முரண்படுவோர் அனைவரையும் (குறிப்பாக முற்போக்குவாதிகள், திராவிட இயக்க சார்புடையவர்கள்) ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்கள் என்ற ரீதியில் மட்டம் தட்டி எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெயமோகன் "பாமரத் தமிழ் மனம்" என்ற ஒரு கருத்தாக்கம் கைவசம் வைத்திருக்கிறார். தன்னுடைய கொள்கைகள், ரசனைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றோடு முரண்படும் தமிழர்களைப் புரிந்துக்கொள்ள அதைப் பயன்படுத்துகிறார் போலும். சில சமயங்களில் ஃப்ராய்ட் பிச்சை வாங்கும் அளவுக்கு இந்த பாமரத் தமிழ் மனதின் உளவியலை அவர் ஆராய்வதுண்டு. எடுத்துக்காட்டாக, இங்கே லியோனியின் பட்டிமன்றங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது ஏன் என்று விளக்குகிறார்:

"அறிவார்ந்தது , முக்கியமானது ,பிரபலமானது என கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப்போட்டு உடைக்கும்போது பாமரத்தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மனத்தின் உளவியலை நாம் கவனிக்கவேண்டும். இவர்கள் எதையும் உழைத்து தெரிந்துகொள்வதிலோ சிந்திப்பதிலோ ஆர்வமற்றவர்கள். அந்த அறியாமை காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆகவே அறிவார்ந்ததோ அங்கீகாரம் பெற்றதோ ஆன எந்த செயலையும் ஒருவகை எரிச்சலுடனோ நக்கலுடனோ பார்ப்பவர்கள். சமூகசேவகிக்கு விருது என்றோ விஞ்ஞானிக்கு பரிசு என்றோ தினத்தந்தியில் படித்ததுமே அதே டீக்கடையில் உட்கார்ந்து அதை கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்துவிடுபவர்கள். எல்லா இடத்திலும் இவர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அறியாமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்."

ஜெயமோகனுடைய புனைவு ஆக்கங்களில் ஊறியவர்களுக்கு "ஜகன்மித்யை" சிறுகதையில் வரும் கதைசொல்லியின் அறைத்தோழன் பாத்திரம் நினைவுக்கு வரக்கூடும். நீட்சே பற்றியும் தத்துவம் பற்றியும் பேச ஆரம்பிக்கும் நம்பூதிரியை முதலில் நக்கல் செய்யும் அவன் பிறகு அவர் நிரந்தரச் சுழற்சி, எல்லையற்ற காலவெளி என்றெல்லாம் தன் தலைக்குமேலே பேசுவதைக் கண்டு மிரண்டு நெற்றியில் விபூதி பூசி ஜாதகக்கட்டைத் தூக்கிவருகிறான். "சாமி, குடும்பத்தில ஒரே கஷ்டம். நீங்க தான் பார்த்துச் சொல்லணும்". ஜெயமோகன் "அறியாமையையே தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள்" தமிழ்நாட்டில் மிக அதிகம் என்ற முடிவுக்கு (கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமலே) எப்படி வந்தார் என்று யூகிப்பது கடினமல்ல.

தமிழர்களின் அறிவாற்றல் மற்றும் நாகரிகம் குறித்த ஒரு தாழ்வான எண்ணம் கேரளத்தில் பரவலாக உள்ளது நன்கு அறியப்பட்ட ஒன்று. என் பார்வையில், இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். நடிகைக்குக் கோயில் கட்டுதல், தலைவனுக்காகத் தீக்குளித்தல், தலைவிக்காக நாக்கை அறுத்து உண்டியலில் போடுதல் போன்ற செய்திகள் தொடர்ந்து அவர்களைச் சென்றடைவது ஒரு காரணம். இன்னொன்று கேரளமெங்கும் பரவியுள்ள ஏராளமான நாடோடி தமிழ் கூலித்தொழிலாளர்கள் தங்கள் ஏழ்மை மற்றும் அறியாமைக் காரணமாக வாழும் அவல வாழ்க்கை. தமிழர்கள் குறித்த இத்தகைய மனப்போக்கை வெளிப்படுத்திய மலையாளிகளுக்கு தான் பலமுறை எதிர்வினையாற்றியதாக ஜெயமோகன் சொன்னாலும் தமிழ் அறிவுச் சூழலைப் பற்றி ஒரு மட்டமான எண்ணத்தையே அவரும் கொண்டிருக்கிறார். தமிழின் ஆகச் சிறந்தப் பத்து நாவல்கள் என்று அவர் முன்வைத்த தரவரிசைப் பட்டியலில் ஆறு நாவல்கள் மலையாள மொழியையும் இலக்கியத்தையும் நன்கறிந்தத் தென் திருவிதாங்கூர்காரர்களால் எழுதப்பட்டவை என்பது இந்த மனப்போக்கின் அனிச்சையான வெளிபாடு எனலாம்.

*****

சரி, மாய யதார்த்த பாணியில் தமிழில் எழுதப்பட்டக் கதைகளை ஏன் குப்பை என்கிறார்? ஏன் இவ்வளவு கோபம்? அதே பதிலில் ஜெயமோகன் எழுதுகிறார்:

"மாய யதார்த்தம் ஒரு நிலப்பகுதியின், மொழியின் பண்பாட்டுப் பின்புலம் கொண்டது. அதை ரசிக்கலாம். இறக்குமதி செய்வது அபத்தம். பீட்சா சென்னையில் செய்யப்பட்டாலும் இத்தாலிய உணவே. நமது உணவு தோசைதான். நமது நாட்டார் மரபு, புராண மரபு ஆகியவற்றிலிருந்தே நம் மிகுபுனைவு வரமுடியும். என் ஆக்கங்களான விஷ்ணுபுரமும், நாகமும் புராண அழகியலில் இருந்து உருவானவை, படுகை நாட்டார் அழகியலில் இருந்து."
அப்படியானால் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்துத் தமிழுக்கு இறக்குமதியான நாவல் என்ற வடிவத்தை ஏன் பயன்படுத்துகிறார் என்ற கேள்வியை விட்டுவிடுவோம். தான் புராண அழகியலிலிருந்து உருவாக்கியதாக ஜெயமோகன் சொல்லும் விஷ்ணுபுரத்தில் லத்தீன் அமெரிக்க மாய யதார்த்த நாவலிலிருந்து குறியீடுகளை இறக்குமதி செய்திருப்பது ஏன் என்ற கேள்வியைக் கூட விட்டுவிடுவோம். இலக்கியத்துக்கு நிலப்பகுதி, மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான எல்லைகள் உண்டு என்பதில் ஜெயமோகன் உறுதியாக இருக்கிறாரா என்பதே கேள்வி. அதே இணையதளத்தில் தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்ற தனி இலக்கிய பிரிவுகள் இந்திய சூழலில் தேவையா தேவையற்றதா என்று ஒரு வாசகர் கேட்டபோது அப்படி தனி அடையாளங்கள் தேவையில்லை என்று மறுத்து ஜெயமோகன் பதில் எழுதுகிறார்:

"தலித் அனுபவம் பிறருக்குச் சிக்காது என்று கொள்வோம். தலித்துக்களின் வாழ்க்கை அனுபவங்கள், அதன் விளைவான அந்தரங்க உணர்வுநிலைகள் அவர்கள் மட்டுமே அறியக்கூடியவை என்பதுதான் அதற்கான வாதம் இல்லையா? இதே வாதத்தை விரித்தெடுப்போம். வெள்ளையனின் அனுபவம் கருப்பனுக்குச் சிக்காது. மேலைநாட்டு அனுபவம் கீழை நாட்டுக்குச் சிக்காது. கன்னடனின் அனுபவம் தமிழனுக்குச் சிக்காது. செம்புல நிலப்பகுதி அனுபவம் கரிசல்மண்காரனுக்குச் சிக்காது. வறண்ட திருப்பத்தூரின் எழுத்து, பசுமை மண்டிய குமரிமாவட்டக்காரனுக்குப் புரியாது. அப்படியேப் போனால் என் அண்டைவீட்டானின் உணர்வு எனக்குப் புரியக்கூடாது. மனித மனம் எவ்வளவு பூடகமானது என நாம் ஒவ்வொருவரும் அறிவோம். எவருமே தங்கள் பகற்கனவுகளைப் பிறிதொரு உயிருக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே கணவனின் உலகம் மனைவிக்குப் புரியாது. ஒரு மனிதனின் அந்தரங்கம் பிற எவருக்குமே புரியாது. ஆகவே இலக்கியம் என்பதே பொய்--அப்படித்தானா?

... தூந்திரப் பிரதேச மக்களின் வாழ்க்கையைப்பற்றி யூரி பலாயன் எழுதினால் குளிர்சாதனப்பெட்டிக்குள் மட்டுமே உறைபனியைக் கண்ட எனக்கு அது புரியும். இந்தச் சாத்தியத்திலிருந்தே இலக்கியம் உருவாகி நிலைநிற்கிறது. சங்ககால வாழ்வின் ஒரு தடயம்கூட எஞ்சாத இன்றும் கபிலன் என் ஆத்மாவுடன் பேசுகிறான். பின்லாந்தின் பழங்குடிமொழியில் கபிலனை மொழிபெயர்த்தால் இதே உணர்வை அவன் அங்கும் உருவாக்குவான். பேரிலக்கியங்கள் நாகரீகங்களை, மொழிகளை, காலங்களைத் தாண்டிச் சென்று தொடர்புறுத்தும் என்பது இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று."

கனியன் பூங்குன்றனே கூட இதைவிடத் தெளிவாகச் சொல்லியிருக்கமுடியாது. சரி, துந்திரப் பிரதேச வாழ்க்கை தமிழனுக்குப் புரியும். கபிலனை பின்லாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம். அப்படியானால் லத்தீன் அமெரிக்க மாய யதார்த்த பாணியில் தமிழில் எழுதினால் மட்டும் அது ஏன் குப்பை ஆகிவிடுகிறது? மாய யதார்த்த பாணியைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலைப் படிக்கும் போது நம் மனக்கண் முன் விரிவது இராமநாதபுரம் பக்கத்துக் கரிசல்காடா அல்லது கொலம்பியாவா? இதே மாய யதார்த்த யுத்தியை கையாண்டு எழுதப்பட்ட ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகளுக்கு இணையாக இந்தியாவைப் பேசிய இன்னொரு நாவல் இருப்பதாக தெரியவில்லை.

உண்மையில் இங்கே ஜெயமோகனின் நோக்கம் தலித் என்ற தனி அடையாளம் தேவையில்லை என்று மறுப்பதே. இது காந்தியார் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்படும் அரசியல் தான். தலித்துக்களுக்கென்று ஒரு தனி அரசியல் அடையாளத்தை நிலைநாட்ட அம்பேத்கார் முயன்றபோதெல்லாம் காந்தி அதைக் கடுமையாக (சாகும்வரை உண்ணாநோன்பு போன்ற வழிகளில்) எதிர்த்து முறியடித்திருக்கிறார். இன்று தலித் மக்கள் காந்தியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தங்களுக்குச் அவர் சூட்டிய 'ஹரிஜன்' என்ற பெயரைத் தூக்கியெறிந்ததில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். (மாயாவதி: "நாங்கள் கடவுளின் மக்கள் என்றால் நீங்கள் என்ன சாத்தானின் மக்களா?")

*****

மேலே சுட்டியக் கேள்வி-பதில்கள் எதிர்முகம் என்ற பெயரில் அச்சில் வந்தபோது அதன் முன்னுரையில் ஜெயமோகன் இணையம் குறித்தும் இணையவிவாதங்களில் பங்கேற்போர் குறித்தும் தன் அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறார். இணையத்தில் விவாதிக்க வருபவர்களின் பொதுவான தரம் விகடன் போன்ற பெரிய இதழ்கள் வழியாக அறிமுகமாகும் வாசகர்களை விடவும் குறைவானது என்கிறார். முழுநேர அரசுப்பணியில் இருந்துகொண்டே பெருநாவல்கள் பலவற்றை எழுதிய (விஷ்ணுபுரத்தில் கோபிலப்பட்டர்: "பத்து நாள் போதாதா ஒரு மகாகாவியம் எழுத?") ஜெயமோகன் சொல்கிறார்:

"இணைய வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் துறையில் பயிற்சி பெற்றவர்கள். சில சமயம் நிபுணர்கள். அவர்கள் உண்மையான சவாலை எதிர்கொள்வதும் உழைப்பதும் அத்துறையில் தான். இலக்கியம் அவர்களுக்கு இளைப்பாறுதலுக்காக மட்டுமே."
அவர் மேலும் சொல்கையில் தமிழ்ச் சிற்றிதழ்களின் வாசகர்களாக வரும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் கோபமும் தீவிரமும் இணைய வாசகர்களிடம் இல்லை என்கிறார். உண்மையில் ஜெயமோகனின் பல கருத்துக்களுக்கு இணையத்தில் எழுந்த எதிர்வினைகளின் தொனி அவர் சொல்லும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் இயல்பிலிருந்து மாறுபட்டதாயிருக்கலாம். இணைய வாசகர்களில் பலரும் கல்வி, பொருளாதாரம் போன்ற தளங்களில் சராசரிக்கு அதிகமான வெற்றிப் பெற்றவர்கள் என்பதால் அவர்களிடம் வெளிப்படும் (சில நேரங்களில் சற்று எல்லை மீறிய) தன்னம்பிக்கை ஜெயமோகனை எரிச்சல்படுத்தியிருக்கலாம். இணைய விவாதங்களில் தன் கருத்துக்கு எதிராக ஏதாவது தகவலோ மேற்கோளோ முன்வைக்கப்பட்டால் "கூகிள் தான் போதிவிருட்சம்" போன்ற எள்ளல்களால் ஜெயமோகன் அதை எதிர்கொள்வது வழக்கம். இணையத்தின் மூலம் ஏற்படும் அறிவு/தகவல் பரவலாக்கமும் அதன் ஜனநாயகத் தன்மையும் ஜெயமோகனுடைய விருப்பத்துக்குரியதாக இல்லை என்பது உணரக்கூடியதாக இருக்கிறது.

இந்தியச் சூழலில் கடந்த காலங்களில் ஞானம் என்பது பொத்திப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'தகுதி' உள்ள சிலரைத் தவிர்த்து ஏனைய சாமானியர்களை ஞானம் சென்றடைந்து மலிந்துவிடாமல் தடுப்பதற்காக போடப்பட்ட எத்தனையோ வேலிகளை சுட்டமுடியும். அறிவுப் பீடங்களுக்கு ஏகபோக உரிமைக் கொண்டாடுபவர்கள் ஊடகப் புரட்சிகளை அஞ்சுவர் என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு. ஐரோப்பாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய கத்தோலிக்க மத அமைப்பின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது. இன்று இணையம் ஆற்றும் பங்கும் ஒருவகையில் இதுபோன்றதே. எடுத்துக்காட்டாக நோயாளிகளின் தகவல் பெறும் உரிமையை எடுத்துக்கொண்டால் இன்றும் கூட பெரும்பாலான இந்திய மருத்துவர்கள் தன்னுடைய நோய் மற்றும் சிகிட்சை குறித்த நோயாளியின் கேள்விகளுக்கு விரிவானப் பதிலை தருவதில்லை. ஆனால் அடிப்படைக் கல்வியும் ஆங்கில அறிவும் உடைய ஒருவர் இணையத்தில் சில மணி நேரங்களை செலவிட்டால் அந்த நோய் பற்றி மருத்துவர்களால் எழுதப்பட்டு வல்லுநர்களால் திறனாய்வு செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுக்கட்டுரைகளைப் படித்து புரிந்துக்கொள்ள முடியும். அது ஒரு மருத்துவரின் அனுபவ அறிவுக்கு ஈடாகாது தான். ஆனால் சமீபகால ஆய்வுமுடிவுகளுக்கு எதிராக ஒரு சிகிட்சையை பரிந்துரைக்கும் மருத்துவரை எதிர்கொள்ள அது உதவும்.

ஜெயமோகனை அறியத் தொடங்கிய நாட்களில் அவர் தனக்கு நான்கு வரிகளில் கடிதம் எழுதும் வாசகருக்குக் கூட பதினைந்துப் பக்க பதில் கடிதம் எழுதக்கூடியவர் என்பதை அறிந்தபோது இந்த அளவுக்கு வாசகர்களை மதிக்கிறாரே என்று வியப்பாக இருந்தது. ஆனால் இணைய விவாதங்களில் தன் கருத்துக்களை மறுக்க துணிந்தவர்களை ஜெயமோகன் எதிர்கொள்ளும் விதம் ஒரு ஐந்தாம் வகுப்புப் பையனுடன் விவாதிக்க வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளான கல்லூரி பேராசிரியரின் தோரணையை நினைவூட்டும். எதிராளியின் தரம், வாசிப்பு, கல்வி, ரசனை ஆகியவை முடிந்தவரை மட்டம் தட்டப்படும். பல சமயங்களில் தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பியவருக்குத் தான் சொல்வதைப் புரிந்துக்கொள்ளத் தேவையான அடிப்படை தகுதிகள் கூட இல்லாததால் விவாதிக்க விரும்பவில்லை என்று முடித்துக் கொள்வார். அப்படியானால் எளிய தொடக்கநிலை வாசகருக்குக் கூட நீண்ட பதில் கடிதங்களை நேரம் செலவிட்டு எழுதுவது ஏன்? என் புரிதலை விஷ்ணுபுர மொழியில் சொல்வதானால் குருவிடம் ஞானம் வேண்டி நிற்கும் வித்யாபேக்ஷியாகத் தான் தொடக்க வாசகர்கள் அவருடன் உரையாட முடியும்.

இது ஒருவிதக் கலாச்சார இடைவெளி எனலாம். கல்லூரியிலிருந்து வெளியேவந்து சில மாதங்களே ஆன ஒரு இளைஞன் தான் பணிபுரியும் துறையில் இருபதாண்டு அனுபவம் உள்ள ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்து சரிநிகர் சமானமாக விவாதிக்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் தொடக்கத்தில் எனக்கு சற்று அன்னியமாகவே இருந்தது. இந்தியாவில் நான் படித்த, பணிபுரிந்த இடங்களில் அது சாத்தியமில்லை. மூத்தவர்களை பெயர் சொல்லி அழைப்பதோ அவர்களுடன் கைக்குலுக்குவதோ இந்திய மரபல்ல. காலில் விழுவது அல்லது வேறு விதமாக வணங்குவதே மரபு. வாழ்வின் கணிசமான பகுதியை மடங்களிலும் குருகுலங்களிலும் செலவிட்டு இந்திய ஞானமரபைக் கற்றதாக அறியப்படும் ஜெயமோகன் விவாதங்களில் ஈடுபடுவோரின் தகுதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரிந்துக்கொள்ளத் தக்கதே. விஷ்ணுபுரம் ஞானசபையில் விவாதம் தொடங்குவதற்கு முன் யாரெல்லாம் அமர்ந்து பேசலாம், யார் நின்றுக்கொண்டுப் பேசலாம், யாருக்கு சபைக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை என்பதெல்லாம் அந்தக்கால 'தகுதி' அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படும். இணையத்தில் அத்தகைய விதிகளை அமல்படுத்துவது எளிதல்ல.

[சற்றே தடம் விலகல்: யோசிக்கையில் நமது மொழிகளில் சமத்துவமான உரையாடல்களே சாத்தியமில்லையோ என்று தோன்றுகிறது. ஒற்றை வாக்கியம் பேசினாலும் பேசுபவரின் தகுதியும் பேசப்படுபவரின் தகுதியும் பெரும்பாலும் வெளிப்பட்டுவிடுகிறது. வீரப்பன் வந்தான், பிரேமானந்தா வந்தார். அம்மா சொன்னாள், அப்பா சொன்னார். ஆங்கிலத்தில் இந்தச் சிக்கல் இல்லை. அதே வேளையில் இது தமிழ் மொழியின் அமைப்பு என்று சொல்லவும் முடியாது. சங்கப் பாடல்களில் தலைவனானாலும் மன்னனானாலும் இறைவனானாலும் 'அவன்' என்று ஒருமையிலேயே குறிக்கப் படுகிறார்கள். அனைவருக்கும் ஒரே மரியாதை எனும்போது மரியாதைக் குறைவு என்ற பேச்சுக்கு இடம் இருந்திருக்காது.]

*****

தமிழில் ஜெயமோகன் அளவுக்கு மரபுவாதம் பேசிய எவரையும் நான் படித்ததில்லை. இந்திய மரபுசார்ந்த கருத்து என்று அவர் முன்வைப்பதை மறுப்பவர்கள் மீது "வெள்ளையன் கருத்தை உணடு கக்குவதே சிந்தனை என்று நம்புபவர்கள்" போன்ற முத்திரைகள் குத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜெயமோகனுடைய இந்த மனப்போக்கை சுந்தர ராமசாமியைப் பற்றிய அவர் எழுதிய இந்த வரிகள் பிரதிபலிக்கின்றன.

"மரபின்மீதான முழுமையான அறியாமை, அதன் விளைவான உதாசீனம், அதேசமயம் மேற்கு தன் மரபில் இருந்து உருவாக்கிய கருத்துக்கள் மற்றும் வடிவங்கள் மீது விமரிசனமற்ற மோகம் ஆகியவற்றுக்கு தமிழில் மிக உச்ச கட்ட முன்னுதாரணம் சு.ரா தான் என்பது பலமுறை அவரிடமும் நான் சொன்ன கருத்து. மரபை ஒட்டுமொத்தமாக விமரிசித்த அவருக்கு மரபை இம்மிகூட தெரியாது, ஆர்வம் சற்றும் இல்லை. தத்துவத்தின் அர்த்தமின்மை பற்றி பேசிய அவருக்கு தத்துவம் மீதும் பயிற்சி இல்லை."
தர்க்க பூர்வமான மேற்கத்திய அணுகுமுறை மற்றும் உள்ளுணர்வு சார்ந்த கீழை நாட்டு அணுகுமுறை என்ற ஒரு பிரிவினையை ஜெயமோகன் பல இடங்களில் பயன்படுத்தி வருகிறார். எனக்கு இவ்விஷயங்களில் பயிற்சி குறைவு என்றாலும் ஜெயமோகன் இதைப் பற்றி எழுதிய கட்டுரைகளை முடிந்தவரை தேடிப் படித்து அவர் சொல்ல வருவதைப் புரிந்துக்கொள்ள முயன்றிருக்கிறேன். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என்ற மூன்று அறிதல்முறைகளை அவர் முன்வைக்கிறார். தர்க்கத்தைப் பற்றி சொல்கையில்:

"அறிந்தவற்றில் இருந்து பெற்ற தர்க்கத்தை வைத்து அறியாதவற்றை வகுத்துக் கொள்ள முயல்வது (தர்க்க பூர்வ அணுகுமுறை). பழம் சிவப்பாக இருக்கும் ,ஆகவே சிவப்பான காய் பழம் என்பது ஒரு தருக்கம். தருக்கம் மட்டுமே உலகத்தை அறிய போதுமானதல்ல என்ற உணர்வு எல்லா தரப்பிலும் உண்டு . இன்றைய அறிவியலாளர்களில் பலர் தருக்கம் மட்டுமே தனித்து ஒருபோதும் இயங்க முடியாது என எண்ணுகிறவர்கள்."
அறிவியலாளர்களைத் துணைக்கு அழைப்பதும், தர்க்க பூர்வ அணுகுமுறையை மேலை நாடுகளோடு தொடர்புப்படுத்துவதும் ஏன் என்பது புரிந்துக்கொள்ளக் கூடியதே. இன்று அன்றாட வாழ்வுக்கும் மிகவும் இன்றியமையாததான நூறு அறிவியல் / மருத்துவ / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டால் ஒன்றுவிடாமல் அத்தனையும் மேலை நாட்டினருடைய தர்க்க பூர்வ அணுகுமுறையின் விளைவுகள் என்பது தெளிவாகும். ஆனால் ஜெயமோகன் இதை முழுக்க ஒப்புக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர் சொல்வது:

"பெரும்பாலான அறிவியல்கண்டுபிடிப்புகள் ஒன்று கனவுகளாக வெளிப்பட்டவை. அல்லது ஒரு பொருளை பார்த்து அதை ஒரு படிமமாகப் பார்க்கும் மனத் தூண்டல் பெற்று அதன்வழியாகப் பெறப்பட்டவை. ஐன்ஸ்டீன் சோப்பு குமிழிகளை பார்த்து அகத்தூண்டலை அடைந்ததாக சொல்வார்கள்."
நியுட்டன் அளவுக்கு படிப்பும் பயிற்சியும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும் இல்லாத ஒரு மனிதனின் முன்பு தினசரி நூறு ஆப்பிள்கள் விழுந்தாலும் புவியீர்ப்பு விசை பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்குமா? ஜெயமோகன் "தருக்க அறிவை விட கற்பனை மேலும் ஆழமானது" என்கிறார்.

"தருக்க அறிவு மனத்தின் மேல்த்தளமான பிரக்ஞையை மட்டும் சார்ந்தது. பிரக்ஞை நமது அகத்தின் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டுமே ஆள்வது. அது அலை. கடல் பின்னால் உள்ளது. ஆழ்மனம் [நனவிலி /Unconscious.] அது படிமங்களினாலானது.[இமேஜ்]. நாமறியாதவற்றையும் நமது கனவு அறியும். ...இலக்கியம் தர்க்கத்தால் ஆனதல்ல. கற்பனையால் உருவாக்கப்பட்டதும், கற்பனையை தூண்டுவதுமான படிமங்களால் ஆனது."
இலக்கியத்தில் கற்பனையின் முக்கியத்துவத்தைப் பற்றி மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பிற அறிவுத்துறைகளில் கற்பனையை தர்க்கத்துக்கு நிகரான ஒரு அறிதல்முறையாக முன்வைப்பது ஆரோக்கியமானதல்ல. இது இலக்கியம், ஆன்மீகம் போன்றத் தளங்களோடு நிறுத்திக்கொள்ளவேண்டிய விஷயங்களை அறிவியல் போன்ற தளங்களுக்கு இறக்குமதி செய்யும் ஜோஷித்தனமான அணுகுமுறைக்கு வழிவகுக்கக்கூடியது. (இன்றிருப்பதைப் போன்ற விமானங்கள் புராண காலத்தில் புஷ்பக விமானங்கள் என்ற பெயரில் உண்மையிலேயே இருந்தன என்றும், அஸ்திரங்கள் எனப்படுவது இன்றைய ஏவுகணைகளே என்றும், பழங்கால இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற அறிவினால் தான் ஜெர்மனியும் ஜப்பானும் இன்று முன்னேறுகின்றன என்று சிலகாலம் முன்பு இந்திய துணை ஜனாதிபதி ஷெகாவத் பேசியதை இங்கே சுட்டலாம்.) "அணுவினைச் சத கூறிட்ட.." என்ற கம்பனின் பாடல் வரி ஒரு இலக்கியக் கற்பனை. அணுகுண்டு தயாரிக்க அந்த 'அறிதல்' போதாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும் மனிதர்களைப் பற்றியக் கற்பனை காலங்காலமாக இருந்தும் என்ன பயன்? வருங்காலத்தில் அதை சாத்தியமாக்குவது தர்க்க பூர்வமான ஆராய்ச்சிகள் மூலம் மட்டுமே இயலும். அப்படி ஒருவேளை சாத்தியமானால் "எங்காள் இதை அப்பவே சொன்னான்" என்று மார்தட்டுவது எத்தனை அபத்தம்.

தர்க்கம், கற்பனை ஆகிய அறிதல்முறைகளைக் காட்டிலும் பல மடங்கு நுட்பமான அறிதல்களை உள்ளுணர்வால் அடையமுடியும் என்கிறார் ஜெயமோகன். உள்ளுணர்வு சார்ந்த அறிதல் முறையை இப்படி விளக்குகிறார்:

"ஒரு குழந்தை எப்படி மொழியின் அல்லது இசையின் சிக்கலான பாதையை தன் புது மூளையின் புதிய சாத்தியங்கள் மூலம் சட்டென்று பிந்தொடர்ந்துவிடுகிறதோ அப்படி மனிதமூளை பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை முற்றிலும் புதிய ஒருவழியில் சென்று தொட்டுவிட முடியும். உள்ளுணர்வை மனிதன் வளர்த்துக்கொள்ள முடியும், பயில முடியும்."
குழந்தை மொழியைக் கற்பதோ இசை அறிமுகம் உள்ளவர்கள் ராகங்களை அடையாளம் கண்டுக் கொள்வதோ தர்க்கத்தைப் பயன்படுத்தாமல் நிகழும் உள்ளுணர்வு சார்ந்த அறிதலாகப் பார்க்கப்படலாம். உள்ளுணர்வு அல்லது மனத்தாவல் மூலம் நிகழ்வதாகக் கருதப்படும் பல அறிதல்களும் உண்மையில் நன்கு புரிந்துக்கொள்ளப்பட்ட 'ஒழுங்கு அறிதல்' (pattern recognition) முறைப்படியே நிகழ்கின்றன. தர்க்கத்தைப் பயன்படுத்தி அந்நிகழ்வை விளக்கவும் அந்த அறிதலை முற்றிலும் தர்க்கத்தின் மூலமாக நிகழ்த்திக் காட்டவும் பயிற்சியுள்ளவர்களால் முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு பாடலின் ஒற்றை வரியைக் கேட்டவுடனேயே பாடுவது ஜேசுதாஸா, பாலசுப்ரமணியமா, ஜெயச்சந்திரனா என்று நம்மில் பலரால் சொல்லிவிட முடியும். மூளை இதுபோன்றவற்றை எப்படி சாதிக்கிறது என்ற தெளிவான புரிதல் இல்லாத நிலையில் "புதிய சாத்தியங்கள் மூலம்" என்ற சொற்றொடரை ஜெயமோகன் பயன்படுத்துகிறார். உண்மையில் ஃபொரியர் (Fourier), காஸ் (Gauss) போன்ற கணிதமேதைகள் முன்வைத்த தர்க்க பூர்வமாக வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு நிரல் எழுதி கணினியில் இட்டால் குரலை வைத்து ஆளை அடையாளம் காணும் ஒரு இயந்திரத்தை உருவாக்கிவிட முடியும் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உறுதிப் படுத்திக்கொண்ட ஒன்று. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்ட எத்தனையோ விஷயங்களுக்கு இன்று தர்க்க பூர்வமான விளக்கங்கள் கிடைத்திருக்கின்றன.

உள்ளுணர்வின் மூலம் பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை தொடுவது பற்றியெல்லாம் எனக்கு சற்றும் தெரியாது என்பதால் அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் இன்னொன்று சொல்லாம். தர்க்க ரீதியான அறிதல்முறைகளுக்கு பதிலாக வேறு அறிதல்முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சமூகத்தில் போலிகள் புகுந்து விளையாடுவதை தவிர்க்கமுடியாது. தர்க்கத்தின் மூலம் ஒருவர் அறிந்துக்கொண்ட ஒன்றை மற்றவர்களால் புரிந்துக்கொள்ளவும் சரிபார்க்கவும் முடியும். ஆனால் உள்ளுணர்வின் மூலம் அறிந்துக்கொண்ட ஞானத்தை ஒருவர் சொல்லும் போது அங்கே தர்க்கத்துக்கு இடம் இல்லாததால் சொல்பவரின் தகுதியைப் பொறுத்தே அது ஏற்றுக்கொள்ளப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அமையும். மரியாதைக்குரியவர்கள் என்றும் அறிவாளிகள் என்றும் கருதப்படுபவர்கள் சொல்லுவதெல்லாம் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளப்படும். காலப்போக்கில் அத்தகைய சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவு வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது என்பதே வரலாறு.

எனக்கு மறுபடியும் விஷ்ணுபுர ஞானசபை நினைவுக்கு வருகிறது. பாரதவர்ஷத்தின் ஆகச்சிறந்த ஞானிகளெல்லாம் கூடியிருக்கும் சபையின் தலைவராக வீற்றிருக்கும் மகாவைதீகர் பவதத்தர் பிரபஞ்ச உற்பத்திக் குறித்த தன் தரிசனத்தை விளக்குகையில் "பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்துக்கொண்ட பின்னும் பூரணமே எஞ்சுகிறது" என்கிறார். சபையிலிருந்து இதற்கு மறுப்பாக ஒரு முனகல் கூட எழவில்லை. (விவாதத்தின் பிற்பகுதியில் பவதத்தர் இதை மறுபடிச் சொல்லும்போது தான் "இது அதர்க்கம்" என்று ஒரு பௌத்த துறவி சொல்கிறார். இன்று இந்தியாவில் பௌத்தம் இருந்த இடம் தெரியவில்லை.) ஒருவேளை பவதத்தர் மேற்படி சூத்திரத்தை ஞானசபையில் சொல்லாமல் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தால் "என்னய்யா இந்த algebra படு அபத்தமாக இருக்கிறதே" என்ற ரீதியில் பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவரும் கடுப்பேறி வெள்ளையன் கருத்தை உண்டு கக்குபவர்களுக்குக் கடும் எதிர்வினையாற்றியிருக்கக் கூடும்