Wednesday, September 17, 2014

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

 

காட்டை பற்றிய கனவு சிறிய வயது முதல் உண்டு. மலையடிவார கிராமம் என்றாலும், மலை மேல் ஏறியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம், ஆனால் காடு என்று ஏதுமில்லை. சோம்பேறித்தனத்தாலும், இது போன்ற விஷயங்களுக்கான தகுந்த துணையில்லாததாலும், வீட்டில் உதை கிடைக்குமென்பதாலும் அந்த பக்கம் போனதில்லை. இருந்தும் காட்டை பற்றி பல கதைகள், சாகச கதைகள் எல்லாம் படித்து படித்து ஒரு மயக்கம் உண்டு.

சில சந்தர்ப்பங்களில் காட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஏமாற்றம் தான். சுருளி அருவி பகுதி நல்ல அடர்ந்த காட்டு பகுதி. ஆனால் எங்கும் நுழைய முடியாத படி வனத்துறை கட்டுப்பாடு உண்டு. தப்பித்தவறி சென்றாலும் பாட்டில்கள் காலை கிழிக்கும் அபாயமுண்டு. குற்றாலம் பற்றி பெரிய கனவுடன் சென்ற எனக்கு, மெயினருவி தந்தது ஏமாற்றம். மரங்களுக்கு நடுவில் சத்தத்தை மட்டும் முதலில் காட்டி சுருளி அருவி தரும் அந்த தரிசனம் இதிலில்லை. மொட்டை பாறையில் கடைகளுக்கு நடுவிலிருக்கும் அருவி எனக்கு பிடிக்கவில்லை, ஒரு குரங்கு கூட இல்லாத அருவி என்ன அருவி.

பெங்களூருக்கு வந்த பின் அலுவலக நண்பர்கள் மலையேற்றத்திற்கு அழைத்தனர், ஆர்வத்துடன் சென்று காரிலிருந்து இறங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு பெரிய மொட்டை மலை. காட்டு ஆசை கொஞ்சம் பூர்த்தியானது கோவா சென்ற போது. யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஏற்பாடு செய்த மலையேற்றம், ஓரளவிற்கு காட்டு ஆசையை திருப்தி செய்தது. ஓரளவிற்கு அடர்ந்த காடு, எப்போதும் ஒரு பக்கத்தில் சிறிய ஓடை, குளிர்.

ஆர்வக்கோளாறில் கூட வந்த அனைவரையும் விட்டு விட்டு தனியாக சென்று கொண்டிருந்தேன். சின்ன சின்ன செடிகள், மரங்கள் என்று பார்த்து கொண்டே சென்றவன், திடிரென ஏதோ நினைவு வந்து நின்று பார்க்கும் போதுதான் அடர்ந்த காட்டிற்குள் தனியாக இருக்கின்றேன் என்று தெரிந்தது. ஒரு கணம் சிறிய அதிர்ச்சி. வழி தப்பி எங்கும் போக வாய்ப்பில்லை, அனைத்து பகுதிகளிலும் அம்புக்குறி போட்டு வைக்கப்பட்டிருந்தது, பின்னால் ஒரு முப்பது பேர் வந்து கொண்டு இருக்கின்றார்கள். இருந்தும் காட்டிற்குள் தனியாக இருப்பது என்பது ஒருவித கிளர்ச்சியையும் பயத்தையும் தந்தது. யந்திர ஓசை கேட்ட செவிகள், இயற்கை ஓசையை கேட்டு கொஞ்சம் தயங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் அனைத்தும் மறந்து ஒரு உற்சாகம், அதன் பின் அனைத்து நாட்களிலும் நான் மட்டும் முன்னே போய்க் கொண்டிருந்தேன். யார் கூட வருவதையும் மனம் விரும்பவில்லை. காடும் நானும் தனியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. இரவில் அப்படி ஒரு துல்லியமான வானத்தை கண்டதில்லை. அந்த பத்து நாட்களும் தனி உலகில் இருந்தேன். தினமும் ஐஸ் போன்ற தண்ணீரில் குளியல், பனி சூழ்ந்த கூடாரத்தில் தங்கல். கடைசி நாளில் ஒரு வருத்தம். அந்த அனுபவத்தை மீண்டும் தந்தது காடு நாவல்.

காடு அந்தளவிற்கு மனதை கவர என்ன காரணம், முதலில் அது நாமிருக்கும் இடத்திற்கு நேர் எதிரானது. இரண்டாவது  இயற்கையன்னை பரிபூரணமாக இருக்குமிடம். (காடு என்பதை இங்கு குறிப்பது மனிதனின் கைவண்ணம் படாத இடத்தை, ஊட்டி, கொடைக்கானல் போன்றவையல்ல, அவைகளுக்கும் ஏசி அறைக்கும் அதிக வேறுபாடில்லை) காடு என்பது தனி விஷயமோ, ஒரு பொருளோ இல்லை, மரம், செடி கொடி, ஓடை ஆறு, மிருகங்கள் என அனைத்தும் சேர்ந்தது. மனிதனும் உள்ளே சென்றால் அவனும் காட்டின் ஒரு அங்கம் தான். ஆனால் மனித மனம் மற்றவை போன்று செய்ல்படுவதில்லை, அனைத்து உயிர்களும் சூழலுக்கு தகுந்தால் போல் தன்னை மாற்றிகொள்ளும் போது மனிதன் சூழலை தனக்கு தகுந்தாற் போல் மாற்ற நினைக்கின்றான். காட்டில் அனைத்தும் அதனதன் எல்லைக்குள்ளேயே வாழ்கின்றன, எல்லை தாண்டினால் காடு தாங்காது. மனிதனும் தன் எல்லையை உணர்ந்து கொண்டால் கொடும் காட்டிலும் வாழலாம்.

பெரும்பாலான மனிதர்களுக்கு காடு என்பது மரக்கூட்டம், மரங்கள் என்பது பணம். அவ்வளவுதான். பல்வேறு காரணங்களுக்காக காடு அழிக்கப்பட்டு வருகின்றது. காடு என்பது மழைக்காரணி என்பது மட்டுமல்ல, அது பல உயிர்களின் உறைவிடம். மனிதனுக்குதான் தன்னை தவிர அடுத்த உயிர்களை பற்றி கவலையில்லையே. காடுகளை அழிக்க அழிக்க, மிருகங்கள் ஊருக்குள் வருகின்றன, விளைவுகள் இப்போதுதான் தெரிய ஆரம்பிக்கின்றது.

காட்டை அதன் சூழலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல, காட்டை விவரிப்பது என்பது அதிலிருக்கும் ஒவ்வொரு செடி கொடி மிருகங்களை விவரிப்பது. ஜெயமோகன் கச்சிதமாக அதை செய்துள்ளார். காலை நேர காடு, மழை கால காடு, இரவு நெருங்கிவரும் காடு, இரவில் காடு, காட்டின் திசைகள், யானைகளின் பழக்கங்கள், காட்டிற்கு மதம் பிடிக்கும் காலம். வசந்த காலம் என்பதை படித்திருக்கலாம், மிஞ்சி போனால் பக்கத்து பார்க்கில் பூ பூக்கும் மரங்களை பார்த்து பரவசப்பட்டிருக்கலாம், ஆனால் காட்டில் வசந்த காலம் எப்படி இருக்கும், எங்கும் பூ பூக்கும் காடு, பூ மணத்தில் மதம் பிடிக்கும் யானைகள், குரங்குகள். அனைத்தும் ஜெயமோகனின் கைகள் வழியாக நம்மிடம் வந்து சேர்கின்றது.

கதை

கிரிதரன் நாயர் அவன் மாமா காட்டிற்கு கட்டும் கட்டுமானங்களை கற்று, தொழில் பழக வருகின்றான். அவன் ஏற்கனவே படித்த கவிதைகள் அவனை காட்டை நோக்கி தள்ளுகின்றது. காடு அவனை பிடிக்கின்றது. காட்டு நீலியும். இறுதியில் காட்டை அவன் விடும்படி ஆகின்றது, காட்டை விட்டு நாட்டில் வந்தமர்கின்றான்.

காட்டை பற்றி ஆரம்ப வர்ணனைகளும், காட்டின் நுணுக்கமான விவரங்களையும் படிக்கும் போது இவர் எவ்வளவு நாள் காட்டில் திரிந்தார் என்று எண்ண தோன்றுகின்றது. ஒவ்வொரு பகுதியும் மிகச்சிறப்பாக இருக்கின்றது. காட்டில் வழி தப்பும் கிரிதரன் அலைந்து திரியும் போது அவனுக்கு காட்சியளிக்கும் காடு மிரட்சி தருவது. காடு நமக்கு அந்நியம் என்ற எண்ணமே அதை மிரட்சி தரும் ஒன்றாக்குகின்றது. பசியில் என்ன செய்வது என்பதை கூட தெரியாமல் அலையும் அவன், பின்னாளில் காட்டை பற்றி பயம் போனதும் இரவிலும் காட்டில் அலைய துணிகின்றான், காட்டில் கிடைப்பதை வைத்து பசி தீர்க்க கற்று கொள்கின்றான். காட்டை நன்கு அறிந்த பின் அது பயம் தருவதில்லை, உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது. காடு நமக்கு அந்நியமில்லை என்ற எண்ணமே நமக்கு பயத்தை போக்குகின்றது. யானை கூட்டத்தை கண்டால் கூட மிரளாமல் அவைகளை விட்டு விலகிச்செல்ல கற்று தருகின்றது. அனைவரும் மிரளும் கீறக்காதனும் நெருக்கமானவானகத் தோன்றுகின்றது.

நாவலின் இரண்டு சரடுகள் காடு, காதல் (காமம் என்றும் பொருள் கொள்ளலாம்). கிரிதரனை இரண்டும் சேர்ந்து அடிக்கின்றது. கிரிதரனின் காதல் காமம், இரண்டும் காட்டில் பொங்கி வழிகின்றது. காமம் தரும் குற்றவுணர்ச்சி, காதல் தரும் பரவசம் இரண்டிற்குமிடையில் சிக்கி விழிக்கும் ஒரு சராசரி. எளிதில் உணர்ச்சி வசப்படும் பாத்திரம். குளிக்கும் நீலியை காணும் அவனிடம் எழுவது காமமல்ல காதல், வெறித்தனமான காதல். அதே சமயம் மாமாவின் மனைவியின் நினைவுகள் அவனை காமத்திற்குள் தள்ளி குற்றவுணர்வை தருகின்றது.

காட்டை விட்டு வந்தபின் கிரிதரனின் வாழ்க்கை போகும் பாதை வெறுமை.

அய்யர், குட்டப்பன் இருவரும் காட்டை அடைந்து காட்டை விட்டு போக மனதில்லாமல் அங்கேயே இருப்பவர்கள். இருவரில் குட்டப்பனே கவர்கின்றான். அய்யர் காட்டை தன் கவிதை மனம் வழியே கண்டு ரசிப்பவர். காட்டிலிருக்கும் அழகும், அமைதியும், சவால்களும் அவரை அங்கு பிடித்து வைக்கின்றன. ஆனால் குட்டப்பனனின் மனம் இயல்பாகவே காட்டை அடைந்துவிட்டது.காட்டை உட்கார்ந்து ரசிக்கும் ஆளல்ல, காட்டுடன் இசைந்து வாழும் ஒருவன். காட்டுடன் கலந்துவிட்டவன். காட்டின் ஒவ்வொரு விஷயத்தையும் இறைவனின் விளையாட்டு என்று நம்பி அதை ஏற்று கொள்பாவன். காட்டிற்கு ராஜா யானை, அதன் கையால் மரணிப்பதே தன் வாழ்விற்கு அர்த்தம் என்று நினைக்கும் அளவிற்கு காட்டுடன் கலந்தவன். அய்யர் அனைத்தையும் விட்டு காட்டில் வந்தமர்கின்றார், அவரை வதைத்தது எதுவென்று அறிந்து கொண்டதாக கூறுகின்றார். எதுவாக இருக்கும்? எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை குட்டப்பன் மாதிரியில்லாமல், காட்டை ரசித்து கொண்டே இருப்பதாக இருக்குமோ? யாருக்கு தெரியும்

காமம். சினேகம்மை, குட்டப்பன், ராசப்பன், ரெஜினா இவர்களுக்கிடையிலான உறவுகள், விளையாட்டுகள். ரெசாலத்திற்கும் தேவாங்கிற்கும் இடையிலான பாசம், அதன் பின்னால் இருக்கும் சோகம், கிரியின் மாமா அவரின் முன் கதை, பின் கதை. கதையில் விதவிதமான பெண்கள். கிரியின் மாமி, கிரியின் அம்மா, அக்கம் பக்கத்து அக்காக்கள், நீலி, கடைசியில் வரும் எஞ்சினியர் மனைவி, கிரியின் மனைவி வேணி. இவர்கள் அனைவரும் கிரியிடம் ஏற்படுத்து பாதிப்பு. காமத்தின் விதவிதமான உருவம். கிரிதரனுக்கு வரும் கனவுக்காட்சி, அவனின் குழப்ப நிலையை அருமையாக காட்டுகின்றது. 

கிரிதரனின் கதை இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் போய் வருகின்றது. முதல் காட்சியில் வரும் பாலம், அடர்ந்த காட்டில் இருக்கும் அந்த இடம், கிரிதரனின் முதிய வயதில் சாக்கடை ஓடும் குப்பை கூளமாக மாறி இருக்கும் காட்சி ஒன்று போதும் இன்று காடுகளின் நிலையை சொல்ல.  எங்கள் ஊரில் பள்ளி அருகே ஒரு ஓடை உண்டு, என் அப்பாவின் சிறுவயதில் அதில் எப்போது தண்ணீர் போகும் என்பார், நாங்கள் படிக்கும் போது நல்ல மழை பெய்தால் அதில் தண்ணீர் போகும். இப்பொது இரண்டு மாதமாக தொடர்ந்து மழை பெய்கின்றது, இன்றும் அதில் சாக்கடைதான் போகின்றது, பன்றிகள் தான் திரிகின்றது. இதை படிக்கும் போது எனக்கு அதுதான் நினைவில் வந்தது.

கதையை மேலும் சுவரஸ்யமாக்குவது உரையாடல்கள். கதையை சாதரண பேச்சு மொழியில் எழுதியிருக்கலாம், ஆனால் அது இந்தளவிற்கு உயிரோட்டமானதாக இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த பேச்சு வழக்கு முதலில் நம்மை நம்மிடத்திலிந்து பெயர்த்து அங்கு கொண்டு செல்கின்றது. இயல்பாகவே கிராமத்து பக்கங்களில் கேலியும் கிண்டலுமுண்டு, அதை அந்த மொழியில் கேட்டால் மட்டுமே சிறப்பாக இருக்கும். பேச்சு மொழியில் எழுது மொழியில் மாற்றினால் சில சமயம் கொஞ்சம் ஆபாசமாக கூட போய்விடும். குட்டப்பனின் வார்த்தைகள் அந்த மொழியில் இருப்பதுதான் அதன் சிறப்பு, ஒரு சில விஷயங்களை என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து கண்டுணரவேண்டும். வனநீலியின் கதை, பரபரப்பான த்ரில்லர் வகை. சில ஃபேண்டசி வைகையும் நமக்கு தேவையாக இருக்கின்றது, ஜெயமோகன் இந்த வகை எழுத்தில் தேர்ந்தவர்.

கதையில் பல இடங்களில் கிறிஸ்துவத்தை பற்றி வருகின்றது. பல இடங்களில் கிண்டல் தொனி இருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. இன்று மலை முழுவதும் கிறிஸ்துவம் பரவும் காரணம் அறிய கொள்ளாம் சே, அறிந்து கொள்ளலாம். 

நாவல் காட்டின் பல்வேறு கால நிலைகளை காட்டுகின்றது. ஆடிச்சாரலில் சிலுசிலுவென்று ஆரம்பிக்கும் கதை, பெருமழை காலத்தில் முடிகின்றது. இறுதி பகுதி நெருங்க நெருங்க கதையிலும் ஒரு சோகம் சூழ்ந்து கொள்கின்றது, வெறுமை வர ஆரம்பிக்கின்றது. நீலியின் மரணத்துடன் கதை முடிகின்றது. கிரிதரனின் மாற்றமும் நிகழ்கின்றது. அவனிடமிருந்த கனவு சிதைந்து, சராசரி மனிதனாகின்றான்.

காட்டின் வர்ணனைகள் அனைத்தும் சாதரண வார்த்தைகளில் அமைந்துள்ளது. பெரிய பெரிய வார்த்தைகளை போட்டு குழப்பாமல், சாதரண வார்த்தைகளால் நமக்கு அதன் சித்திரத்தை தந்துவிட்டார். உதவிக்கு சங்கப்பாடல்கள். கிரிதரன் - அய்யர் உரையாடல்கள் அனைத்தும் காட்டின் பல பரிமாணங்கள்.
இனி என்று காட்டிற்குள் சென்றாலும் இந்த காடு நாவலின் நினைவே இருக்கும். காஞ்ரமரத்தை தேட தோன்றும். படிக்க வேண்டிய ஒரு நாவல்.